சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா?


சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா?
x

சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா?

திருவாரூர்

முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டில் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அலையாத்திக்காடு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரப்பளவு கொண்ட காடாகும். இந்த காடு புயல் மற்றும் சூறாவளி காற்றிலிருந்தும், சுனாமியிலிருந்தும் கடலோர கிராமங்களையும், கிராம மக்களையும் பாதுகாக்கும் அரணாக விளங்குகின்றன. கடலோரங்களில் எற்படும் மண் அரிப்பை பெருமளவில் தடுத்து நிறுத்துகிறது.

இக்காடுகள் திருவாரூர், தஞ்சை, நாகை மாவட்டங்களில் பரவி உள்ளது. காவேரி ஆற்று படுகையின் தென்கோடியில் முத்துப்பேட்டை சதுப்பு நில அலையாத்திக்காடுகள் அமைந்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம் மேற்கு பகுதியில் தொடங்கி நாகை மாவட்டத்தின் கோடியக்கரை பகுதி கிழக்கு வரை இந்த அலையாத்திக்காடு நீண்டுள்ளது.

இந்த முத்துப்பேட்டை அலையாத்திக்காடுகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் ஆற்றின் வழியே படகில் நெடுந்தூரப்பயணம் செல்வது பயணிப்பவர்களின் மனதை சொக்க வைக்கும்.

சுற்றுலா பயணிகள் வருகை

இருபுறமும் அடர்ந்து படர்ந்து கிடக்கும் அலையாத்திக்காடுகளின் இயற்கை அழகு அவர்களை மெய்மறக்க வைக்கும். உள்ளே சென்றதும் லகூன் பகுதியில் உள்ள குட்டிக்குட்டி தீவுகள் அழகாக பிரமிக்க வைக்கும். ஆங்காங்கே தென்படும் பறவைகளின் கூச்சல் சத்தம் நம்மை ரசிக்க வைக்கும். இப்படி ஆற்றின் வழிப்பயணமாக கடலுக்கு செல்வதும் ஒரு ஆனந்தம் தான் என்று காட்டுக்குள் சென்றுவிட்டு வரும் சுற்றுலா பயணிகள் கூறத்தவறுவதில்லை. அந்த அளவிற்கு ஒட்டு மொத்த இயற்கையின் அழகை காட்டும் ஒரு சொர்க்க பூமியாக இங்கு காணமுடியும். அதனால் இந்த காட்டின் அழகை ரசிக்க ஆண்டு முழுவதும் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்து செல்கின்றனர்.

அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்

இந்த காட்டை வனத்துறையினர் முழுமையாக பராமரித்து வருகின்றனர் கஜா புயலுக்கு பிறகு அலையாத்திக்காட்டில் சுற்றுலா பயணிகள் பயனுக்கு இருந்த நடைப்பாதைகள், குடில்கள், டவர்கள், தங்குமிடங்கள் அனைத்தும் சேதமாகியுள்ளன. பராமரிப்பின்றி காணப்படுவதால் நாளுக்குநாள் அவைகள் வீணாகி சுற்றுலா பயணிகள் பயன்படுத்த முடியாதளவில் போனது. இதனால் சுற்றுலா பயணிகளை அங்கு இறக்கி விடாமல் படகிலேயே சுற்றிக்காட்டிவிட்டு திரும்ப அழைத்து வந்து விடுகின்றனர். அதனால் அலையாத்திக்காட்டில் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டிக்கெட் கவுண்டர்

இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில்,

முத்துப்பேட்டை அலையாத்திக்காடு ஆசியாவின் மிகப்பெரிய காடாகும் இங்கு அரிதான லகூன் தீவுகளும் உள்ளன. சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டும் இதுநாள்வரை சுற்றுலா பணிகள் வசதிக்கு அடிப்படை வசதிகள் செய்ய வில்லை. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக அலையாத்திக்காட்டையும், அதை சார்ந்த பகுதியையும் சுற்றிப்பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து செல்கின்றனர். எனவே அலையாத்திகாட்டிற்குள் சுற்றுலா பயணிகள் வசதிக்கு நடைப்பாதை, தொட்டி பாலம், ஓய்வு எடுக்கும் குடில், ஏறிபார்க்கும் வகையில் டவர், கழிப்பிடம், குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். அதேபோல் ஜாம்புவானோடை படகு துறையில் டிக்கெட் கவுண்டர், சுற்றுலா பயணிகள் காத்திருக்க கட்டிடம், கழிப்பிடம், குடிநீர் போன்ற வசதிகளை செய்து தர வேண்டும் என்றனர்.


Next Story