இலவசங்கள் அவசியமா?


இலவசங்கள் அவசியமா?
x
தினத்தந்தி 29 Oct 2022 6:54 PM GMT (Updated: 29 Oct 2022 7:00 PM GMT)

இலவசங்கள் அவசியமா? என்பது பற்றி பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர்

தமிழ்நாட்டில் இலவசங்களுக்கு பஞ்சம் இல்லை. அதனால்தான் நாட்டில் பஞ்சமும் இல்லை என்கிறார்கள் சிலர். இன்னும் சிலரோ இல்லாதவர்களுக்குத்தான் இலவசம். எல்லோருக்கும் இலவசம் என்பதை ஏற்க முடியாது. அது அரசுக்கு இழப்பை ஏற்படுத்துவதுடன், நம்மவர்களை சோம்பேறி ஆக்குகிறது என்கிறார்கள்.

உயிர் ஆதாரம்

இருந்தாலும் கொரோனா காலங்களில் வாழ்வு ஆதாரங்களை இழந்து தவித்த அப்பாவி மக்களுக்கு உயிர் ஆதாரங்களாய் இருந்தது இலவசங்கள் என்பதை கண்கூடாக காண முடிந்தது.

பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கு இலவச உணவு, இலவச சீருடை, இலவச புத்தகங்கள், இலவச சைக்கிள்கள், இலவச மடிக்கணினிகள், ஏழை பிள்ளைகளின் படிப்புக்கு உதவித்தொகை, அரசு ஆஸ்பத்திரிக்கு இலவச சிகிச்சை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இலவச வீடு, இலவச அரிசி, இலவசமாக சமையல் கியாஸ் இணைப்பு, கோவில்களில் அன்னதானம் என்றெல்லாம் வழங்கப்பட்டு வருவதை வெறுமனே இலவசங்கள் என்று எளிதாக சொல்லிவிடவோ, புறம் தள்ளிவிடவோ முடியாது. இருந்தாலும் மீனை கொடுப்பதைவிட, தூண்டிலை கொடுத்து மீன்பிடிக்க கற்றுக்கொடுப்பதே சிறந்தது என்று கூறுவது உண்டு.

பிரதமர் நரேந்திரமோடி எதிர்ப்பு

இந்த இலவசங்கள் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல. ஏதோ ஒரு வடிவில் எல்லா மாநிலங்களிலும் சில இருக்கத்தான் செய்கின்றன.

இந்த நிலையில் மாநில அரசுகளின் இலவச திட்டங்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திரமோடி, தனது கருத்தை வலுவாக பதிவு செய்து இருக்கிறார். இலவச திட்டங்கள் வரி செலுத்துகிறவர்களுக்கு வலியை தருகின்றன என்று வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார். தேர்தலின்போது வாக்காளர்களை கவர்வதற்காக இலவச திட்டங்களை அறிவிக்கும் கலாசாரம் வளர்ந்து வருகிறது. இலவச திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஆபத்து. இந்த மோசமான கலாசாரத்தை மக்கள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். இந்திய அரசியலில் இருந்து இலவச திட்ட கலாசாரம் வேரறுக்கப்பட வேண்டும் என்றும் அவர் உறுதிபட கூறி இருக்கிறார்.

இதுபற்றி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.

உழைக்கும் எண்ணம் மழுங்கடிக்கப்படுகிறது

பெரம்பலூர் நான்கு ரோடு அருகே சோழன் நகரை சேர்ந்த இல்லத்தரசி அமராவதி சுப்ரமணியன்:- தமிழகத்தில் இலவசம் என்ற ஒற்றை சொல்லால் பொதுமக்களின் தன் மானம், உழைக்கும் எண்ணம் மழுங்கடிக்கப்பட்டு வருகிறது. மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கிறது. யார் எதை கொடுத்தாலும் தயங்காமல் பெறும் பழக்கம் இலவசத்தால் மட்டுமே வந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இலவசமாக யாருக்காவது ஏதேனும் கொடுக்க வேண்டும் என்றால், கொடுப்பவரே மிகவும் யோசிக்க வேண்டும். ஏனென்றால் பெறுபவர் எவ்வளவு ஏழையாக இருந்தாலும், அவ்வளவு எளிதாக கை ஏந்தி அதனை பெற்றுவிடமாட்டார்கள். இப்படிப்பட்ட தன்மானம் மிக்க தலைமுறைதான், தற்போது பிச்சை கேட்பதை கூட மிரட்டி கேட்கும் அளவிற்கு மழுங்கடிக்கப்பட்டுள்ளார்கள் என்பது கசப்பான உண்மை. மக்களின் பலம் அவர்களது மூளை, உழைப்பு. இது இரண்டும் இன்று மழுங்கடிக்கப்படுவது இலவசத்தால். தமிழகத்தில் பொதுமக்களின் உழைப்பு இலவசத்தால் தேய்ந்து வருவதற்கு உதாரணம், வடமாநிலத்தினரின் வருகை. இது நிறுவனங்கள் வைத்து நடத்துபவர்களின் தவிர்க்க முடியாத வேதனையான பதிவு. மருத்துவமும், கல்வியும் தவிர, மற்ற அனைத்து இலவசங்களும் மக்களை வீழ்ச்சி அடைய வைக்குமே தவிர ஒருநாளும் வாழ்வாதாரம் ஆகாது. தற்போது உலக நாடுகளின் மிக முக்கிய பொறுப்புகளில் தமிழனின் மூளையே பயன்பாட்டில் உள்ளதை நாம் அறிவோம். இன்னும் 30 ஆண்டுகளில் இது சாத்தியமா என்பது கேள்விக்குறி. எனவே இலவசத்தை அரசு உடனடியாக நிறுத்தி, மக்கள் தன் பசி அறிந்து உழைக்க நல்ல வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இன்றைய இளைஞர்களின் உழைப்புக்கு பெரும் தடையாக இருக்கிற போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

இலவச திட்டங்கள் தேவை

பெரம்பலூர் ரெங்கா நகரை சேர்ந்த வக்கீல் சங்கர்:- மக்களுக்கு இலவச திட்டங்கள் தேவையானதுதான். ஏனெனில் அடித்தட்டு ஏழை மக்களின் வாழ்வாதாரம் முன்னேற, அவர்களின் குறைந்தபட்ச நல்வாழ்வுக்கும், ஏழை மக்களின் பிள்ளைகள் அனைத்து நலமும் பெறவும் கண்டிப்பாக இலவச திட்டங்கள் தேவை. இதுவும் சமூக நீதியின் ஒரு பகுதி என்றால் மிகையாகாது.

குறைந்த விலையில் தரமான அரிசி

வெங்கலம் கிராமத்தை சேர்ந்த செல்வாம்பாள்:- இலவச திட்டங்களுக்கு ஏழை, எளியவர்களை தேர்வு செய்து வழங்கினால் அதனை பாராட்டலாம். அதே சமயத்தில் பஸ்சில் இலவச பயணம் என்பதில் பயனடையும் ஏழைகளின் சதவீதம் என்பது மிகக் குறைவாகவே உள்ளது. அதேபோல் ரேஷன் கடையில் இலவசமாக வழங்கக்கூடிய அரிசியினை வாங்கி உணவுக்காக பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் மிக குறைவாகவே உள்ளது. அந்த அரிசியை மாடுகளுக்கு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது. எனவே இலவசம் என்று கொடுக்காமல் அதனை தரமான அரிசியாக மார்க்கெட் விலையை விட பாதி விலையில் கொடுத்தால் எல்லோரும் வாங்கி பயன்படுத்துவார்கள். எனவே அரசு இலவசம் என்று கொடுக்காமல் குறைந்த விலையில் கொடுப்பது நல்லது. அதே சமயத்தில் தரமான கல்வி, மருத்துவம் ஆகியவற்றை இலவசமாக கொடுப்பதை வரவேற்கிறோம்.

ஏழைகளுக்கு முறையாக சென்றடைய...

குன்னம் அண்ணாநகரை சேர்ந்த பெருமாள்:- அரசின் இலவச நலத்திட்ட உதவிகள் என்னை போன்ற ஏழை விவசாயிகளுக்கு தேவையானதுதான். இம்மாதிரியான இலவச திட்டங்களை நம்பி பலர் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். இலவச நலத்திட்டங்களை ஏழைகளுக்கு முழுமையாகவும், முறையாகவும் இடைத்தரகர் இன்றி சென்றடைய அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி பயனடையச் செய்ய வேண்டும்.

ஊழலுக்கு வழிவகுக்கும்

வெங்கலம் கிராமத்தை சேர்ந்த மோகன்:- மக்களுக்கு இலவசம் அவசியமற்றவை. மக்களுக்கு அரசு இலவசமாக கல்வி, மருத்துவத்தை தவிர வேறு ஏதேனும் வழங்கினால், அது ஆட்சியாளரின் ஊழலுக்கு வழிவகுக்கும். அனைத்து மக்களுக்கும் முற்றிலும் இலவசமாக கல்வி, மருத்துவம் போன்றவற்றைத்தான் மத்திய-மாநில அரசுகள் கொடுக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் மதுவை ஒழித்தாலே பெரும்பாலான குடும்பத்தினர் அரசு கொடுக்கும் இலவசத்தை எதிர்பார்க்காமல் வாழ்வார்கள்.


Next Story