அரசு ஆஸ்பத்திரிகளில் கர்ப்பிணிகளை டாக்டர்கள் சரியாக பரிசோதிப்பது இல்லையா?
அரசு ஆஸ்பத்திரிகளில் கர்ப்பிணிகளை டாக்டர்கள் சரியாக பரிசோதிப்பது இல்லலை என்று கலெக்டர் வளர்மதி கேள்வி எழுப்பி உள்ளார்.
அரசு ஆஸ்பத்திரிகளில் கர்ப்பிணிகளை டாக்டர்கள் சரியாக பரிசோதிப்பது இல்லலை என்று கலெக்டர் வளர்மதி கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆய்வுகூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்த மாதாந்திர ஆய்வுகூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-
மருத்துவ அதிகாரி மணிமாறன்:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் புகையிலை பயன்படுத்துவதை கட்டுப்படுத்திடும் நடவடிக்கைகள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்கும் ஆய்வுப்பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 2,290 பேர் பொது இடங்களில் புகைபிடித்தல் மற்றும் சிறுவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்தல், பள்ளிக்கு அருகாமையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் என மொத்தம் 2,290 வழக்குகள் பதியப்பட்டு, ரூ.2 லட்சத்து 58 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அலுவலர்:- அயோடின் கலந்து உப்பு விற்பனைகள் குறித்து 3 மாதத்திற்கு ஒருமுறை வணிகக்கடைகள், வீடுகள், ஓட்டல்கள், உப்பு விற்பனை நிலையங்களில் உப்புகள் பரிசோதனை செய்து சேகரிக்கப்பட்டு சென்னைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
கர்ப்பிணிகளை...
கலெக்டர் வளர்மதி:-பிரசவ காலத்தில் குழந்தைகள் இறப்பு கடந்த ஆண்டு 13.8 சதவீதம் இருந்தது. நடப்பு ஆண்டிலும் அதே நிலையில் இருந்து வருகிறது. இதற்கான காரணம் குறித்து கேட்டறிந்து மருத்துவர்கள் உரிய பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சையின் போது கடைபிடிக்க வேண்டிய முறைகளை மேலும் செம்மையாக செய்து இறப்பு சதவீதம் இல்லாத மாவட்டம் என்ற நிலையை அடைய மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைவிட தனியார் மருத்துவமனையில் அதிக பிரசவங்கள் நடைபெறுகிறது. இதற்கு என்ன காரணம்? மருத்துவர்கள் சரியாக கர்ப்பிணிகளை பரிசோதிப்பது இல்லையா? அல்லது அவர்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை இல்லை என்பது அர்த்தமா? என்று கேள்வி எழுப்பினார்.
மருத்துவ அதிகாரி மணிமாறன்:- அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதலில் கர்ப்பிணிகள் வரும் போது அதற்கான பதிவுகளையும், பரிசோதனைகளையும் எடுத்துக் கொள்கின்றார்கள். ஆனால் பிரசவத்திற்கு தனியார் மருத்துவமனையில் பெரும்பாலும் சென்று விடுகின்றனர். நாங்கள் தெரிவித்தும் அவர்கள் இங்கு வருவதில்லை.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு
கலெக்டர்:- மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மருத்துவமனைக்கு வரும் தாய்மார்களிடம் நல்ல முறையில் பேசி அரசு இலவசமாக பிரசவம் செய்து கொடுக்கின்றது. தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ளது. இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எதிர்வரும் மாதங்களில் கட்டாயமாக இதன் மீது தனி கவனம் செலுத்தி ஆய்வு செய்யப்படும். ஆகவே சம்பந்தப்பட்ட வட்டார மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள் தங்கள் மருத்துவமனையில் அதிக பிரசவம் நடைபெறும் வகையில் மருத்துவமனை கட்டமைப்புகளை மேம்படுத்திடவும், பொதுமக்களுக்கு முறையான சிகிச்சைகள் வழங்கவும், பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனை மீது நம்பிக்கை ஏற்படும் விதமாக சுகாதாரத்துறையினர் பணியாற்ற வேண்டும்.
அரக்கோணம், வாலாஜா, நெமிலி வட்டாரங்களில் அதிக அளவு டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன. முறையான ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மருத்துவர்:- கிராம ஊராட்சிகளில் குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரின் கலப்பது முறையாக இல்லை. குளோரின் பவுடர் தட்டுப்பாடு உள்ளது.
கலெக்டர் வளர்மதி:- உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். காய்ச்சல் அதிகமாக கண்டறியப்படும் பகுதிகளில் முகாம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு விவாதங்கள் நடந்தது. கூட்டத்தில் பொது சுகாதார துணை இயக்குநர் மணிமாறன், இணை இயக்குனர் மருத்துவ பணிகள் (பொறுப்பு) நிவேதிதா, வட்டார மருத்துவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.