பெரம்பலூரில் தெருநாய்கள் தொல்லையா? இல்லையா?-நடைபயிற்சி செய்வோர் கருத்து
தெருநாய் பிரச்சினை ஏதோ தெருவில் உள்ள பிரச்சினையாக இல்லாமல் இன்றைக்கு தேசிய பிரச்சினையாகவே உருமாறி இருக்கிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் மட்டும் ஒரு நிமிடத்துக்கு 10 முதல் 12 பேர், தெருநாய் கடிக்கு அல்லது துரத்தலுக்கு ஆளாகிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அபரிமிதமான இனப்பெருக்கம்
தெருநாயின் சராசரி வாழ்நாள் 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும். 10 முதல் 12-வது மாதத்திலேயே நாய்கள் கருத்தரிக்கும் நிலையை அடைந்து விடுகிறது. ஒரு நாய் ஒரே சமயத்தில் குறைந்தபட்சம் 8 குட்டிகள் முதல் அதிகபட்சம் 16 குட்டிகள் போடும். இதனால் நாய்கள் இனப்பெருக்கம் அபரிதமான வளர்ச்சியை கண்டு வருகிறது.
ஆரம்ப காலத்தில் ரேபிஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாகவும், இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் தெருநாய்கள் விஷ ஊசி போட்டு கொல்லும் நிலை இருந்தது. காலப்போக்கில் ரேபிஸ் நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாலும், விலங்கு நல வாரியத்தின் எதிர்ப்பாலும் நாய்களை கொல்லும் முறை கைவிடப்பட்டு, கருத்தடை செய்யும் முறை கொண்டு வரப்பட்டது. முன்பு நாய்களை சுறுக்கு வலை மூலம் மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து வந்தனர். அப்போது கழுத்து இறுக்கி நாய்கள் இறக்கும் நிலை ஏற்பட்டதால், தற்போது வலை மூலம் நாய்களை பிடிக்கும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களுக்கு அச்சுறுத்தல்
தெருநாய்களால் அதிகம் பாதிக்கப்படுவது நடைபயிற்சி செய்பவர்கள்தான். எந்திரமயமான இன்றைய வாழ்க்கையில் முறையற்ற உணவு பழக்கம், உடல் உழைப்பின்மை போன்ற காரணங்களால் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோர் ஏராளம். அவர்களுக்கெல்லாம் டாக்டர்கள் சொல்லும் முக்கிய ஆலோசனை, 'தினமும் நடைபயிற்சி செய்யுங்கள்' என்பதுதான்.
அதன்படி பூங்காக்கள், சாலையோர பகுதிகள் போன்ற இடங்களில் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சியில் ஈடுபடுவோர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சிலர் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணியான விலையுயர்ந்த நாய்களையும் நடைபயிற்சியின்போது உடன் அழைத்து வருகிறார்கள். அப்படி ஆர்வமுடன் நடைபயிற்சிக்கு வருவோருக்கு தெருநாய்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. தெருநாய்களால் அச்சுறுத்தல் என்று ஒருபுறம் பொதுமக்களும், தெருநாய்கள் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன என்று விலங்குகள் நல அமைப்பினர் இன்னொரு புறமும் புகார் அளிக்க சென்று கொண்டிருக்கின்றனர்.
இத்தகைய சூழலில் பெரம்பலூரில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதா? இல்லையா? என்பது குறித்து அன்றாடம் நடைபயிற்சியில் ஈடுபடுபவர்களில் சிலர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
தினமும் ரூ.110 செலவு
பெரம்பலூர்-எளம்பலூர் ரோடு, ராமு பிள்ளை காலனியை சேர்ந்த செல்ல பிராணிகள் ஆர்வலர் செல்வகாந்த்:- பெரம்பலூரில் தற்போது தெரு நாய்களின் தொந்தரவு குறைந்துள்ளது. சுற்றித்திரியும் நாய்களும் யாருக்கும் தொந்தரவு கொடுப்பதில்லை. அதனை நாம் சீண்டினால் தான், அது நம்மை சீண்டும். நான் கடந்த 2010-ம் ஆண்டு முதல் தெரு நாய்களை எடுத்து வளர்த்து வருகிறேன். தற்போது எங்கள் வீட்டில் 4 பெண் நாய்களும், ஒரு ஆண் நாய் வளர்க்கப்பட்டு வருகிறது. தற்போது நான் டீக்கடையில் வேலை பார்த்து வருகிறேன். கிடைக்கும் சம்பளத்தில் நாய்களுக்கு பால், பிஸ்கெட் வாங்கி கொடுக்க தினமும் ரூ.110 செலவிடுகிறேன். வேலைக்கு வரும் போது நாய்களுக்கு தேவையான அளவு உணவு, தண்ணீர் வைத்து விட்டு வருகிறேன். இரக்கம் குணம் உடையவர்கள் மனிதர்களுக்கு எவ்வளவு உதவி செய்தாலும், அவர்களுக்கு அது போதாது. வாயில்லாத ஜீவனுக்கு ஒரு வேளை உணவளித்து பாருங்கள், அவை நன்றியுள்ளதாக இருக்கும்.
அறுவை சிகிச்சை அரங்கம்
பெரம்பலூர் நகர பொதுமக்கள்:- நடைபயிற்சி செல்லக்கூடிய இடங்களில் அதிகாலை நேரத்தில் தான் நாய்கள் தொந்தரவு உள்ளது. விடிந்த பிறகு அந்த அளவுக்கு தொந்தரவு இல்லை. ஒரு சில தெருக்களில் தான் நாய்கள் தொந்தரவு உள்ளது. மேலும் சாலையோரங்களில் திறந்த வெளியில் இறைச்சி கடைகள் போடப்படுவதால் அங்கு கூட்டமாக நாய்கள் நிற்கும் போது வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. சில ஆக்ரோஷமான நாய்கள் தான் சாலையில் செல்வோர்களை கடித்து விடுகிறது. ஆண்மை மிக்க நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய பெரம்பலூர்-ஆத்தூர் சாலை ரெங்கா நகரில் நகராட்சி நிர்வாகம் சார்பில் அரங்கு அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. தற்போது அந்த அரங்கு பயன்பாட்டில் இல்லாததால் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாததால் நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யும் அரங்கினை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீட்டிற்கு காவலாய் இருக்கும்
பெரம்பலூர் கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் டாக்டர் சுரேஷ் கிறிஸ்டோபர்:- தெரு நாய்களில் அதிக ஆக்ரோஷமாக உள்ள நாய் தான் நடை பயிற்சி மேற்கொள்பவர்களை, சிறுவர்களை, முதியவர்களை, இருசக்கர வாகனத்தில் விரட்டி கடிக்க பாய்கிறது. மேலும் இந்த நாய்கள் சாலையின் குறுக்கே ஓடுவதால் வாகன ஓட்டிகள் விபத்துகளிலும் சிக்குகின்றனர். இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. தெரு நாய்களுக்கு வெறிநோய் பிடித்தால் நிறைய பேரை கடித்து விடும். தெரு நாய்களுக்கு கால்நடை மருத்துவமனையில் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. கருத்தடையும் இலவசமாக செய்யப்படுகிறது. இதற்கு தெரு நாய்களை பிடித்து கொண்டு வரவும், அதனை பராமரிக்கவும் அந்தப்பகுதி பொதுமக்கள், தன்னார்வலர்கள் முன்வர வேண்டும். கருத்தடை (குடும்ப கட்டுப்பாடு) அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாய்களை எங்கு பிடிக்கப்பட்டதோ, அந்த இடத்தில் கொண்டு விட வேண்டும். தெரு நாய்களில் முதலில் ஆண் நாய்களுக்கு தான் கருத்தடை செய்ய வேண்டும். கருத்தடை செய்யப்பட்ட ஆண் தெரு நாய்களை அதே பகுதியில் விட்டால் தான், அந்த பகுதிக்கு வேறு பகுதிகளில் இருந்து வரும் நாய்களை உள்ளே வர விடாது. இதனால் அந்த தெருவில் உள்ள பெண் நாய்களின் இனப்பெருக்கம் தடைபடும். நாய்களின் வாழ்நாள் 11 முதல் 13 ஆண்டுகள் ஆகும். வெளி நாட்டு நாய்களை வாங்கி வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவதை விட, நாட்டு நாய்களை வாங்கி வளருங்கள். தெரு நாய்களை எடுத்து வளர்த்து பாருங்கள், அவை வீட்டிற்கு காவலாய் இருக்கும். ஆரம்ப கட்டத்தில் அந்த நாய்களை சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும். பின்னர் இருக்காது. நானும் தெரு நாயை ஒன்றை எடுத்து வளர்க்கிறேன். தெரு நாய்களை வளர்ப்போர்களை கண்டிக்காமல், உற்சாகம் படுத்துங்கள். அந்த நாய்கள் வளர்ப்போர்க்கு நாளடைவில் இன்றியமையாத தோழனாக மாறிவிடும். தற்போது மத்திய அரசு விலங்கு பிறப்பு கட்டுப்பாடு குறித்து சட்டத்தில் திருத்தம் செய்து கடந்து மாதம் நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதில் நாய்களை 2 ஆக பிரித்துள்ளார்கள். அதில் ஒன்று தனிநபரால் வளர்க்கப்படும் நாய்கள் செல்ல பிராணிகள் என்றும், மற்றொன்று தெரு நாய்களை சமூக விலங்காக என்றும் பிரித்துள்ளது. தெரு நாய்களை கண்காணிக்கவும், கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் மாவட்டத்தில் ஒரு கண்காணிப்பு குழு அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த கண்காணிப்பு குழுவிற்கு நகராட்சி ஆணையாளர் தான் பொறுப்பு. இதனால் இனி வரும் காலங்களில் தெரு நாய்கள் பேணி பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.