ஈரோட்டில் தீவிரவாதிகள் பதுங்கலா? என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை - 2 பேரை ரகசிய இடத்துக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு


ஈரோட்டில் தீவிரவாதிகள் பதுங்கலா? என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை - 2 பேரை ரகசிய இடத்துக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 July 2022 2:38 AM GMT (Updated: 27 July 2022 8:19 AM GMT)

ஈரோட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

ஈரோட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சென்னையில் இருந்து 3 பேர் கொண்ட குழுவினர் ஈரோடு விரைந்து வந்தனர். பின்னர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தங்களது விசாரணையை தொடங்கினர். இதைத்தொடர்ந்து மாலை 6 மணி அளவில் ஈரோடு போலீசாருடன் சேர்ந்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள், தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்பட்ட ஈரோடு மாணிக்கம்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டுக்கு வந்தனர்.

பின்னர் அந்த வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதைத் தொடர்ந்து என். ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிரடியாக அந்த வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது அந்த வீட்டில் 5 பேர் ஒரு குடும்பமாக வசித்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அங்கு இருந்த 2 பேரை மட்டும் ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விசாரணையை தீவிரபடுத்தினர்.

மேலும் வீட்டில் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்பட்டு வந்த ஸ்மார்ட் போன், லேப்டாப், டைரிகள், சிம்கார்டுகள், வங்கி பாஸ் புக் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விசாரணை இரவு 11 மணி வரை நீடித்தது. அதன் பின்னரும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.இதனால் மாணிக்கம் பாளையம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, 'பெங்களூர் திலக் நகர் பகுதியில் அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த அக்தர் உசேன் லஸ்கர் என்பவரை கடந்த 24-ந் தேதி கைது செய்து விசாரித்தனர். அவர் கொடுத்த தகவல் அடிப்படையில் சேலத்தில் பதுங்கி இருந்த அப்துல் அலி ஜூபா என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர் அளித்த தகவலின் அடிப்படையில் ஈரோடு மாணிக்கம் பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்' என்றனர்.


Next Story