நகராட்சி தலைவர் பதவி வகித்தவர்கள் பெயர் சிவகங்கை தெருக்களுக்கு வைக்கப்படுகிறதா?- அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


நகராட்சி தலைவர் பதவி வகித்தவர்கள் பெயர் சிவகங்கை தெருக்களுக்கு வைக்கப்படுகிறதா?- அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

நகராட்சி தலைவர் பதவி வகித்தவர்கள் பெயர் சிவகங்கை தெருக்களுக்கு வைக்கப்படுகிறதா? என அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


நகராட்சி தலைவர் பதவி வகித்தவர்கள் பெயர் சிவகங்கை நகர தெருக்களுக்கு வைக்கப்படுகிறதா? என்பது பற்றி அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

நகராட்சி தீர்மானம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா, மணலூரை சேர்ந்த மணிமாறன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

ஒவ்வொரு நகரிலும் உள்ள தெருக்கள், முக்கிய பகுதிகளுக்கு சுதந்திர போராட்ட தியாகிகள், தலைவர்கள் பெயர்களைத்தான் வைப்பார்கள். சிவகங்கை நகராட்சியின் 8-வது வார்டில் உள்ள தெருவை முன்னாள் பிரதமர் சாஸ்திரி தெரு என்று அழைக்கிறார்கள்.

ஆனால், இதுபோன்ற பெயர்களை எல்லாம் மாற்றிவிட்டு, சிவகங்கை நகராட்சியில் இதுவரை தலைவர்களாக இருந்தவர்களின் பெயர்களை வைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். 8-வது வார்டில் சாஸ்திரி தெரு என்ற பெயரை மாற்றிவிட்டு, முன்னாள் நகராட்சி தலைவர் நாகராஜன் பெயரை வைக்க முடிவு செய்து உள்ளனர். அவர் இறந்துவிட்டாலும், அவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் இருந்தன.

ரத்து செய்யுங்கள்

அதேபோல 10-வது வார்டில் உள்ள நெல்மண்டி தெரு என்ற பெயரை மாற்றிவிட்டு, முன்னாள் சேர்மன் முருகன் தெரு என வைப்பதற்கு முடிவு செய்து உள்ளனர்.

பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடையவர்களின் பெயர்களை தெருக்களுக்கு வைப்பது என்று நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது சட்டவிரோதம்.

இவர்களின் சுயலாபத்துக்காக நாடு தழுவிய தலைவர்களின் பெயர்களை மாற்றிவிட்டு, குறிப்பிட்ட சிலரின் பெயர்களை வைக்க முடிவு செய்தது ஏற்புடையதல்ல. எனவே சிவகங்கை நகராட்சியில் போடப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

பதில் அளிக்க உத்தரவு

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கு குறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர், சிவகங்கை நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.


Related Tags :
Next Story