வடமாநில வாலிபர்கள் கைவரிசையா?


வடமாநில வாலிபர்கள் கைவரிசையா?
x

கொள்ளை சம்பவத்தில் வடமாநில வாலிபர்கள் கைவரிசையா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி

ரெயில்வே ஊழியர் வீட்டில் கொள்ளை

திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ்.காலனி அசோக்நகர் மேற்கு விஸ்தரிப்பை சேர்ந்தவர் நாகலெட்சுமி (வயது 57). ரெயில்வேயில் ஊழியரான இவர் தனது தாயாருடன் வசித்து வருகிறார். நாகலெட்சுமியின் தங்கை மகள் திருமணம் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதற்காக வீட்டில் 70 பவுன் நகைகளை வைத்து இருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை நாகலெட்சுமி வீட்டை பூட்டிவிட்டு கடைவீதிக்கு சென்றார். அப்போது அவருடைய வீட்டின் பக்கவாட்டு சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றனர். கடைவீதிக்கு சென்றுவிட்டு பகல் 1.30 மணி அளவில் நாகலெட்சுமி வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டார். வீட்டுற்குள் சென்று பீரோவை பார்த்தபோது 70 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

3 தனிப்படை அமைப்பு

உடனடியாக கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 4 வாலிபர்கள் அந்த தெரு வழியாக நடந்து சென்றதும், அவர்களில் 2 பேர் தெருவை நோட்டமிட்டதும், மற்ற 2 பேர் சுவர் ஏறி குதித்து நாகலெட்சுமி வீட்டிற்குள் இறங்கியதும் பதிவாகி இருந்தது.

இதையடுத்து அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் துப்பு துலக்க கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் அஜய்தங்கம் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வடமாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்ற சந்தேக கண்ணோட்டத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

1 More update

Next Story