நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் தனித்தனி கவரில் வைத்து வழங்கப்படுமா?


நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் தனித்தனி கவரில் வைத்து வழங்கப்படுமா?
x

நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் தனித்தனி கவரில் வைத்து வழங்கப்படுமா?

நாகப்பட்டினம்

நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் தனித்தனி கவரில் வழங்கப்படுமா? என்று நோயாளிகள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

மருந்தகங்கள்

நாகையில், அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இந்த ஆஸ்பத்திரி எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.

இங்கு மகப்பேறு சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு ஆகியவற்றின் அருகே 2 மருந்தகங்கள் உள்ளன. நோயாளிகளை பரிசோதிக்கும் டாக்டர்கள் காலை, மதியம் மற்றும் இரவில் சாப்பிட வேண்டிய மருந்து, மாத்திரைகளை சீட்டில் நோயாளிகளிடம் எழுதி கொடுக்கின்றனர்.

கையில் கொடுக்கப்படும் மாத்திரைகள்

அந்த மருந்து சீட்டுடன் அங்குள்ள மருந்தகங்களுக்கு நோயாளிகள் மருந்து வாங்கச் சென்றால் அனைத்து மாத்திரைகளையும் அள்ளி வெறுமனே கையில் கொடுக்கின்றனர்.

அதில் எந்தெந்த மாத்திரை மருந்துகளை காலை, மதியம் மற்றும் இரவில் சாப்பிட வேண்டும் என்பதை குறித்து கொடுப்பதில்லை. டாக்டர் எழுதி கொடுத்த சீட்டை வைத்து மருந்து, மாத்திரைகளை எடுத்து அப்படியே கையில் அள்ளி கொடுத்து விடுகின்றனர்.

முறையாக சாப்பிட முடியாத நிலை

அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய, அடித்தட்டு மக்கள்தான். அவர்களால் ஆஸ்பத்திரியில் கொடுக்கும் மருந்து, மாத்திரைகளை முறையாக சாப்பிட முடியாத நிலை உள்ளது.

டாக்டர்களின் அறிவுரைப்படி மருந்து, மாத்திரைகளை சாப்பிடாவிட்டால் தங்களது நோய் எப்படி குணமாகும் என்று சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கேட்கிறார்கள்.

சிரமப்படுகின்றனர்

டாக்டர்கள் பரிந்துரைத்த மாத்திரைகளை நோயாளிகளின் கையில் கொடுக்கும் மருந்தக பணியாளர்கள், உட்கொள்ளும் முறை குறித்து விளக்கம் கூறினாலும், மொத்தமாக கையில் வாங்கும்போது அதனை எப்படி சாப்பிட வேண்டும் என்ற குழப்பத்தால் நோயாளிகள் திணறி வருகின்றனர்.

அதில் மருந்து மாத்திரைகளை கொடுக்கும் சில பணியாளர்கள் சரியான விளக்கமும் கொடுப்பது கிடையாது. கடமைக்கு மாத்திரைகளை வெட்டி கொடுத்து விடுகின்றனர். இதனால் ஏழை, எளிய மக்கள் சிரமப்படுகின்றனர்.

தரமான சிகிச்சை அளித்தாலும்...

நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையான தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும் அங்குள்ள மருந்தகங்களில் வழங்கப்படும் மருந்து, மாத்திரைகளை தனித்தனி கவரில் போட்டு, எந்த வேளைக்கு சாப்பிட வேண்டும் என்று குறிப்பிட்டு கொடுத்தால் தான், முழுமையான சிகிச்சை நோயாளிகளுக்கு சென்று சேரும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

தனித்தனி கவரில் வழங்கினால் பயன்

திருக்குவளையை சேர்ந்த உஷா:-

நெஞ்சு வலி காரணமாக நான் இங்கு சிகிச்சைக்காக வந்துள்ளேன். டாக்டர் எழுதி கொடுத்த மருந்து சீட்டை மருந்தகத்தில் கொடுத்து மாத்திரைகளை வாங்கினேன். பல்வேறு மாத்திரைகளை மொத்தமாக கையில் கொடுத்துள்ளனர். அதை எப்படி சாப்பிட வேண்டும் என்று அங்குள்ள பணியாளர்கள் தெரிவித்தும் எனக்கு சற்று குழப்பமாக உள்ளது.

மருந்து, மாத்திரைகளை அவற்றை சாப்பிடும் வேளைகளை குறிப்பிட்டு தனித்தனி கவரில் வழங்கினால் சுலபமாக இருக்கும். அரசு ஆஸ்பத்திரிகளில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதை நம்பித்தான் நாங்கள் சிகிச்சைக்கு வருகிறோம். ஆனால் இங்கு மருந்து மாத்திரைகளை ஏதோ கடமைக்கு கொடுப்பது போல கையில் வழங்குவது சற்று வருத்தத்தை அளிக்கிறது என்றார்.

பணியாளர்கள் கோபப்படுகிறார்கள்

நாகை மாவட்டம் திருப்புகலூரை சேர்ந்த மூதாட்டி சகுந்தலா:-

எனது கணவருக்கு ரத்த கொதிப்பு, சர்க்கரை வியாதி உள்ளிட்டவை உள்ளதால் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளோம். டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்து சீட்டை கொடுத்து மருந்தகத்தில் மாத்திரைகள் வாங்கினேன். மொத்தமாக கையில் கொடுத்ததால் இதை எப்படி சாப்பிட வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. எனக்கே புரியவில்லை என்றால், இதனை எப்படி எனது கணவரிடம் சொல்லுவேன். மாத்திரைகளை எப்படி சாப்பிடுவது என்று திரும்ப கேட்டால் இங்குள்ள பணியாளர்கள் கோபப்படுகின்றனர். இதனால் மீண்டும் அவர்களிடம் கேட்க முடியவில்லை.

மாத்திரைகளை தனி, தனி கவரில் போட்டுக் கொடுத்தால், எழுதப் படிக்க தெரிந்தவர்களிடம் கேட்டாவது பயன்படுத்த வசதியாக இருக்கும். இப்போது வாங்கிய மாத்திரைகளை எந்த வேளை, எப்படி சாப்பிட வேண்டும்? என்று எனது கணவரிடம் எப்படி போய் சொல்ல போகிறேனோ தெரியவில்லை என்றார் அந்த மூதாட்டி.

தரமான சிகிச்சை நோயாளிகளுக்கு சென்றடையும்

நாகையை சேர்ந்த விஜய்:- நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தரமான சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகளை வழங்கி வருகின்றனர். இதனாலேயே ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மட்டுமல்லாது வசதி படைத்தவர்களும் கூட இந்த ஆஸ்பத்திரியை நாடி வருகின்றனர். அப்படி இருக்கையில், இங்குள்ள மருந்தகங்களில் வழங்கப்படும் மருந்து, மாத்திரைகள் தனித்தனி சீட்டில் எந்தெந்த ேவளை சாப்பிட வேண்டும் என்று குறிப்பிட்டு வழங்குவது கிடையாது.

இதனால் படித்தவர்கள் கூட, எந்த மாத்திரைகளை எந்த வேலை சாப்பிட வேண்டும் என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். அப்படி இருக்க படிக்காத ஏழை, எளிய மக்கள் எப்படி மாத்திரைகளை சரியாக பயன்படுத்துவார்கள். கவரில் போட்டுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டால் வெளியில் சென்று கவர் வாங்கி வாருங்கள், இங்கு கிடையாது என்று கறாராக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசு சுகாதாரத் துறையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் வழங்கப்படும் மருந்து, மாத்திரைகளை தனித்தனியாக கவரில் போட்டு வழங்குவதற்கும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் படிக்காத பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை அனைவருக்கும் தரமான சிகிச்சை முழுமையாக கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

---------


Next Story