மாதம் ரூ.60 ஆயிரம் பெறுபவர்கள் ஏழைகளா: ஏழைகளுக்கான இடஒதுக்கீடு அல்ல இது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


மாதம் ரூ.60 ஆயிரம் பெறுபவர்கள் ஏழைகளா: ஏழைகளுக்கான இடஒதுக்கீடு அல்ல இது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 12 Nov 2022 11:04 AM IST (Updated: 12 Nov 2022 11:07 AM IST)
t-max-icont-min-icon

மாதம் வருமானம் ரூ.60 ஆயிரம் பெறுபவர்கள் ஏழைகளா என அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை,

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்ட திருத்தம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகின்றது.

இந்த கூட்டத்தின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

இடஒதுக்கீட்டால் தகுதி போனது, திறமை போனது என சொல்லி வந்த சிலர் இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள்.

நூற்றாண்டு காலமாக போற்றி பாதுகாத்து வந்த சமூநீதி கொள்கைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. சாதியினால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பை கொடுப்பதுதான் சமூக நீதி. இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை சேர்க்க கூடாது என ஜவஹர்லால் நேரு காலத்தில் பேசப்பட்டது.

ஏழைகளுக்கான எந்த திட்டத்தையும் திமுக அரசு தடுக்காது. திமுக அரசின் பொரும்பாலான திட்டங்கள் ஏழை மக்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது தான். ஏழை மக்களின் வறுமையை போக்க மத்திய அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் திமுக அரசு ஆதரிக்கும். மாதம் வருமானம் ரூ.60 ஆயிரம் பெறுபவர்கள் ஏழைகளா. முன்னேறிய சமூகத்தை சேர்ந்த ஏழைகளுக்கான இடஒதுக்கீடு அல்ல இது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார் .


Next Story