குரூப்-4 தேர்வு எழுதி வெற்றி பெற தயாரா? உதயநிதி ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்


குரூப்-4 தேர்வு எழுதி வெற்றி பெற தயாரா? உதயநிதி ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்
x

குரூப்-4 தேர்வு எழுதி வெற்றி பெற தயாரா? என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

நெல்லை,

பா.ஜனதா கட்சியில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு குழுவில் இடம் பெற்று உள்ள மாவட்ட நிர்வாகிகளுக்கு மாநில அளவிலான கூட்டம் நெல்லை பாளையங்கோட்டையில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக காலையில் நெல்லையப்பர் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். அங்கு காந்திமதி யானையிடம் அவர் ஆசி பெற்றார்.

உதயநிதிக்கு சவால்

பின்னர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

என் மண், என் மக்கள் பாதயாத்திரை எழுச்சியாக அமைந்துள்ளது. தி.மு.க. கட்சி கொள்கைகளை அரசு திட்டங்களிலும் திணித்து வருகிறது. நீட்டை வைத்து அரசியல் செய்துவரும் தி.மு.க. தற்போது இடியாப்ப சிக்கலில் சிக்கி உள்ளது.

கவர்னர் பதவி தொடர்பாக பேசும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பதவியை துறந்து விட்டு குரூப்-4 தேர்வை எழுதி வெற்றி பெறட்டும் பார்ப்போம்.

தேர்தலில் தி.மு.க. ஆட்சியையும், பா.ஜ.க. ஆட்சியையும் மக்கள் தராசு தட்டை வைத்து பார்த்து வாக்களிப்பார்கள். வேலையில்லாத அரசியல் கட்சிகள் ரஜினி குறித்து பேசுகிறார்கள். ரஜினி, யோகி காலில் விழுந்தது எந்தவிதத்திலும் தவறல்ல. யோகி ஆட்சி தமிழகத்தில் வந்திருந்தால் நல்லாட்சியாக அமைந்திருக்கும். சி.ஐ.ஜி. அறிக்கையில் ஊழல் இருப்பதாக சொல்லவில்லை. செலவினங்கள் அதிகரித்திருப்பதாகதான் சொல்லி இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாதயாத்திரை நிறைவு

அண்ணாமலை கடந்த மாதம் 28-ந் தேதி ராமேசுவரத்தில் இருந்து 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் பாதயாத்திரையை தொடங்கினார்.

பல்வேறு மாவட்டங்களில் பாதயாத்திரை மேற்கொண்ட அவர் நேற்று மாலையில் நெல்லை டவுன் அருகே உள்ள பாறையடி கிராமத்தில் இருந்து தொடங்கினார். அவருடன் மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பூபேந்திர யாதவ் மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் சென்றனர்.

இதனையடுத்து நடந்த கூட்டத்தில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நேற்றுடன் அண்ணாமலையின் முதற்கட்ட பாதயாத்திரை நிறைவு பெற்றுள்ளது. 2-வது கட்டமாக வருகிற 3-ந் தேதி தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்குகிறார்.


Related Tags :
Next Story