விளையாட்டு மீது இளைஞர்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? குறைந்து வருகிறதா? சர்வதேச விளையாட்டு வீரர்கள், ஆர்வலர்கள் கருத்து


விளையாட்டு மீது இளைஞர்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? குறைந்து வருகிறதா? சர்வதேச விளையாட்டு வீரர்கள், ஆர்வலர்கள் கருத்து
x

விளையாட்டு மீது இளைஞர்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? குறைந்து வருகிறதா? என்பது சர்வதேச விளையாட்டு வீரர்கள், ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர்

ஒன்றைச் சொல்லிவிட்டு, ''விளையாட்டுக்குச் சொன்னேன். பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்!'' என்று சிலர் சொல்வதை நாம் கேள்விப்பட்டு இருக்கலாம். இங்கே விளையாட்டு என்ற சொல் 'பொருட்படுத்தத் தேவையில்லை' என்ற பொருளில் வருகிறது. இன்றைய இளைஞர்கள் பலரும் விளையாட்டை அவ்வாறே பொருட்படுத்தத் தேவையில்லாத ஒரு செயலாகவே ஒதுக்கி விடுகிறார்கள்.

காரணம், அவர்களின் விளையாட்டு நேரங்களை நவீன தொழில்நுட்பங்கள் பறித்துக்கொள்கின்றன என்றே சொல்ல வேண்டும்.

சாதிக்க முடியும்

கம்ப்யூட்டர், செல்போன் என்று எந்திரங்களில் மூழ்கி கிடக்கும் அவர்கள், உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் சோர்வடைந்து வருகிறார்கள். சுவர் இருந்தால் மட்டுமே சித்திரம் வரைய முடியும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும். இளைஞர்கள் அதை உணர வேண்டும். மாணவர்கள் விளையாட்டை வெறும் விளையாட்டாக கருதிவிடக் கூடாது. உடலுக்கும் உள்ளத்திற்கும் நலம் சேர்ப்பது விளையாட்டு. எனவே விளையாட்டை ஒரு பாடமாக நினைத்து படித்துக்கொள்ள வேண்டும். பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இன்றைய இளைஞர்கள் எந்த அளவில் விளையாட்டுகளில் ஆர்வம் காண்பிக்கின்றனர் என்பது குறித்து சர்வதேச விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதுபற்றிய விவரங்களைக் காண்போம்.

வெறிச்சோடி கிடக்கின்றன

சர்வதேச கைப்பந்து வீரரும், நெல்லை நண்பர்கள் கைப்பந்து கழகம் மற்றும் டாக்டர் சிவந்தி கைப்பந்து கழக செயலாளருமான பி.ஜெகதீசன்:- சென்னையில் கடந்த 1986-ம் ஆண்டு டாக்டர் சிவந்தி ஆதித்தன் பெயரில், அவரின் தொடர் உதவியுடன் ''டாக்டர் சிவந்தி கிளப்'' என்ற பெண்களுக்கான கைப்பந்து அணி தொடங்கப்பட்டு அதன் மூலம் பல பெண்கள் இலவச கைப்பந்து பயிற்சி பெற்று பல மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் பல அரசு துறைகளில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். 2013-ம் ஆண்டு பள்ளி அளவில் உள்ள வசதியற்ற பெண் பிள்ளைகளுக்கு பயிற்சி அளித்து புதிய பல வீராங்கனைகளை உருவாக்கி வருகிறோம். இந்த விளையாட்டு அரங்கில் கைப்பந்து, கபடி மட்டுமின்றி ஆக்கி, கூடைப்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளுக்கு பயிற்சி பெற்று வந்தனர். 2000-ம் ஆண்டிற்கு பிறகு மாணவர்களின் செல்போன் மோகம், பள்ளிகளின் தேர்ச்சி விகித எதிர்பார்ப்பாக பெரும்பாலான பள்ளிகளின் விளையாட்டு வகுப்புகளுக்கு அனுமதியின்மை, பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லாமை, பெற்றோர்களிடம் விளையாட்டின் மீதான ஆர்வமின்மை போன்ற பல காரணங்களால் இருக்கின்ற விளையாட்டு அரங்கங்களும் பயிற்சி பெற மாணவர்கள் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன.

கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு போட்டிகள் நடத்துவதற்கு பல நிறுவனங்கள் உதவி செய்வதை நிறுத்தி விட்டன. இதனால் போட்டிகள் நடத்த முடிவதில்லை. நாம் சர்வதேச அளவில் ஜொலிக்க முடியாமல் போகிறது.

சாதனை படைக்க முன்வர வேண்டும்

கடந்த 1981-ம் ஆண்டில் இருந்து 1996-ம் ஆண்டு வரை 4 ஒலிம்பிக் போட்டிகள் உள்பட 75 சர்வதேச தடகள போட்டிகளில் கலந்து கொண்டு 80-க்கும் அதிகமான விருதுகளை பெற்ற ஒரே பெண் என்ற பெருமையை கொண்டவரும், சென்னையில் உள்ள இந்திய உணவு கழகத்தின் தென்மண்டல பொது மேலாளருமான ஷைனி வில்சன்:- மத்திய, மாநில அரசுகள் விளையாட்டை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழக அரசு விளையாட்டுத்துறையை மேம்படுத்த பள்ளி, மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஊக்குவித்து வருகிறது. விளையாட்டில் இளைஞர்கள் ஆர்வம் காண்பித்தாலும் அது போதுமானதாக இல்லை. இன்னும் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வம் காண்பிக்க வேண்டும். ஒலிம்பிக் சங்க தலைவராக டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பொறுப்பேற்ற பிறகு அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் போட்டிகளில் பங்கேற்றதுடன், சர்வதேச அளவிலும் விருதுகளையும் குவித்தனர். தற்போது விளையாட்டு வீரர்களுக்கு அரசு செய்து தரும் வசதிகளை பயன்படுத்தி அதிகம் பேர் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு சர்வதேச அளவில் சாதனை படைக்க முன்வர வேண்டும். சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள நான் செல்லும்போது இப்போது இருப்பது போன்ற வசதிகள் எதுவும் பெரிதாக கிடையாது. ஆனால் தற்போது அரசுகள் விளையாட்டு வீரர்களுக்கு அதிக வசதிகள் செய்து தருவதால் அதனை பயன்படுத்தி சர்வதேச அளவில் இந்தியாவிற்கு விளையாட்டு துறையில் மேலும் நல்ல பெயரை பெற்றுதர இன்னும் அதிகமான இளைஞர்கள் முன்னுக்கு வர வேண்டும்.

செல்போனில் விளையாட்டு

அரியலூரை சேர்ந்த கல்லூரி மாணவர் மியூசிக் ராஜன்:- தற்போதைய காலகட்டத்தில் செல்போனில் விளையாடும் ஆர்வம் இளைஞர்களிடம் அதிகரித்துவிட்டது. ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சமூக வலைத்தளங்களை பார்த்து அதில் மூழ்கியுள்ளனர். வெளிேய சென்று விளையாடுவது என்பது கேள்விக்குறியாகிவிட்டது. முன்பு உடலுக்கும், உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலான விளையாட்டுகளில் இளைஞர்கள் ஈடுபட்டனர். முன்பெல்லாம் தெருக்களில் கிட்டிபுல், கோலி, கோகோ, கபடி, வாலிபால், கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டுகளில் ஈடுபட்டனர். வியர்க்க, விறுவிறுக்க வெயிலையும் பொருட்படுத்தாமல் விளையாடுவதில் இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர். அவ்வாறு விளையாடும்போது மிகுந்த மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். ஆனால் தற்போது பலர் கையில் செல்போனுடன் ஒரே இடத்தில் அமர்ந்து விடுகின்றனர். இதனால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஏற்படும் பாதிப்புகளை பற்றி அவர்கள் உணர்வதில்லை. வெளியே சென்று விளையாடும்போதும் உடல் ஆரோக்கியமாக இருக்கும். நன்றாக விளையாடுவதன் மூலம் நிம்மதியாக தூங்கலாம். ஆனால் தற்போது செல்போனில் மூழ்கி தூக்கமின்றி தவிக்கின்றனர்.

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க...

இறகுப்பந்தாட்ட போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற வீரர் வினோத்:- தற்போது இளைஞர்களிடம் விளையாட்டு ஆர்வம் அதிகரித்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் இளைஞர்கள் கபடி, வாலிபால், கிரிக்கெட், இறகுப்பந்து ஆகிய விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவ-மாணவிகளை, அவர்களின் பெற்றோர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். இதனால் அவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் குறைகிறது. தற்போது விளையாட்டு துறைக்கு அரசு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வருவதால் மாணவ-மாணவிகளை விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள பள்ளி, கல்லூரி நிர்வாகங்களும், பெற்றோர்களும் அனுமதிக்க வேண்டும்.

ஊக்கப்படுத்த வேண்டும்

தா.பழூர் அருகே உள்ள மதனத்தூரை சேர்ந்த குடும்பத் தலைவி கலையரசி:- இளம் தலைமுறையினர் விளையாட்டுக்காக நேரம் ஒதுக்குவது மிகவும் குறைவாகவே உள்ளது. கிராமப்புறங்களில் கூட செல்போன்கள், கம்ப்யூட்டர்கள் போன்றவற்றில் விளையாட்டுகளை விளையாடும் நிலைக்கு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை வந்து விட்டனர். ஓடியாடி விளையாடும் பாரம்பரியமான விளையாட்டுகள் தற்போது கிட்டத்தட்ட வழக்கொழிந்து போய்விட்டது போல தெரிகிறது. கிராமப்புறங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை விளையாட்டு மைதானங்களில் விளையாடுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஆனால் தற்போதும் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆங்காங்கே திறமையானவர்கள் கண்டறியப்பட்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதை காண முடிகிறது. அதேபோல் சிறுவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் விளையாட்டுகளில் ஆர்வம் காட்ட வேண்டும். செல்போன்கள், கம்ப்யூட்டர்கள், இணையதள விளையாட்டுகளில் மூழ்கி விடாமல் உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியம் தரக்கூடிய விளையாட்டுகளில் தங்கள் பிள்ளைகள் ஈடுபடுவதற்கு, அவர்களை பெற்றோர்கள் தூண்ட வேண்டும். அவர்களது விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்தி, அவர்களின் தனித் திறமையை வளர்த்து, விளையாட்டு போட்டிகளில் சாதனை படைக்க உறுதுணையாக இருக்க வேண்டும்.

விளையாட அனுமதிக்க வேண்டும்

வேப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவி கவுசிகா:- மாணவ, மாணவிகளுக்கு கல்வி எவ்வளவு அவசியமோ, அதேபோல் விளையாட்டும் முக்கியமான ஒன்றாகும். இதை பெற்றோரும், ஆசிரியர்களும் புரிந்து கொண்டு மாணவ-மாணவிகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் அவர்களை விளையாட அனுமதிக்க வேண்டும். மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் ஓடியாடி விளையாடுவதன் மூலமாக மூளை சுறுசுறுப்பாகவும், உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். இது குறித்து அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி செல்போனில் விளையாடுவதை தவிர்த்து, மைதானங்களுக்கு சென்று விளையாட ஊக்கப்படுத்த வேண்டும்.

விளையாட்டுக்கு முக்கியத்துவம்

பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின்:- தமிழ்நாட்டில் விளையாட்டு துறைக்கு அரசின் சார்பில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதால் தற்போது இளைஞர்களிடம் விளையாட்டு ஆர்வம் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டுக்கு அதிக முக்கியவத்துவம் கொடுக்கப்படவில்லை. தற்போது விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவ-மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அந்த விளையாட்டில் அதிகம் பயிற்சி கொடுத்து வருவதால், அவர்கள் மாவட்ட, மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்து வருகிறார்கள். மேலும் தமிழகத்தில் தற்போது முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பொது பிரிவும் சேர்க்கப்பட்டதால் படிக்கின்ற, படித்த இளைஞர்கள் மட்டுமின்றி, படிக்காத இளைஞர்களும் விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்கிறார்கள். இதனால் அவர்களின் விளையாட்டு திறமைகளை வெளிக்கொண்டு வர முடிகிறது.


Next Story