ரூ.3¼ லட்சம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி தலைவர் கைது


ரூ.3¼ லட்சம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி தலைவர் கைது
x
திருப்பூர்


ஊத்துக்குளி அருகே மக்காச்சோளம் அரைக்கும் ஆலை விரிவாக்கத்திற்கு ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் லஞ்சம் பெற்ற சுண்டக்காம்பாளையம் ஊராட்சி தலைவர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஊராட்சி தலைவர்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுண்டக்காம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக ஆனந்த் என்ற லோகநாதன் உள்ளார்.

அதே பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் மக்காச்சோளம் அரைக்கும் ஆலை நடத்தி வருகிறார். இவர் தனது ஆலையை விரிவாக்கம் செய்வதற்காக சுண்டக்காம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார்.

இதையடுத்து ஆலை விரிவாக்கப் பணி அனுமதிக்காக ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த் என்ற லோகநாதன், ராதாகிருஷ்ணனிடம் ரூ.6 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.

ரூ.1 லட்சம் முன்பணம்

இதில் முன் பணமாக ரூ.1 லட்சம் முன்னதாகவே கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீதி லஞ்சப்பணத்தையும் கொடுத்தால்தான் ஆலை விரிவாக்கப்பணிக்கு அனுமதி அளிக்க முடியும் என்று ஊராட்சி தலைவர் ஆனந்த் கறாராக கூறியுள்ளார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராதாகிருஷ்ணன் இது குறித்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊராட்சி தலைவரை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகள் ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்தை ராதாகிருஷ்ணனிடம் போலீசார் கொடுத்து அனுப்பினர்.

ஊராட்சி மன்ற தலைவர் கைது

அந்த பணத்தை அவர், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த ஊராட்சி தலைவர் ஆனந்திடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் கவுசல்யா தலைமையிலான போலீசார் பாய்ந்து சென்று ஊராட்சி தலைவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இதையடுத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

ஊத்துக்குளியில் லஞ்சம் வாங்கிய ஊராட்சி தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது


Next Story