மேலும் ஒரு டவுசர் கொள்ளையன் கைது


மேலும் ஒரு டவுசர் கொள்ளையன் கைது
x
தினத்தந்தி 5 Jun 2023 10:15 PM IST (Updated: 6 Jun 2023 3:44 PM IST)
t-max-icont-min-icon
திருப்பூர்


தாராபுரம் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மேலும் ஒரு டவுசர் கொள்ளையனை போலீசார் கைது செய்து அவனிடமிருந்து 6 பவுன் நகையை மீட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

3 வீடுகளில் நகை-பணம் திருட்டு

தாராபுரத்தில் கடந்த மாதம் 25-ந்தேதி அரசு பஸ் கண்டக்டர் தங்கவேல் என்பவரது வீட்டில் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5½ பவுன் சங்கிலி திருடு போனது. கடந்த 31-ந்தேதி அசோக்நகர் பகுதியில் கூட்டுறவு வங்கி மேலாளர் செல்லமுத்து (58) வீட்டில் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, ரூ.3 லட்சம் பணம் அரை கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றனர்.

அதே போன்று கடந்த ஏப்ரல் 5-ந்தேதி கணபதி நகரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஜீவானந்தம் வீட்டில் 8 பவுன் நகைகள் திருடு போனது. இது குறித்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

கண்காணிப்பு கேமரா காட்சிகள்

மேலும் தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு திருட்டு சம்பவம் நடந்த வீடுகளின் அருகில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் டவுசர் அணிந்து வந்து திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. எனவே டவுசர் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தாராபுரம் திருப்பூர் சாலையில் ஐ.ஐ.டி கார்னர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

2 பேர் பிடிபட்டனர்

அப்போது இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தியதில், அவர்கள் தாராபுரம் பகுதியில் தொடர் திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் அவர்கள் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரை சேர்ந்த இம்ரான் (35), தர்மபுரி மாவட்டம் கவியரசு (25) என தெரியவந்தது அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்த 10 பவுன் நகை, ரூ.90 ஆயிரத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் ஒருவர் கைது

இதில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள மீனம்பட்டி பகுதியை சேர்ந்த ராமரை (26) போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 3 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி மற்றும் மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து முக்கிய குற்றவாளியான காமாட்சிபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அர்ஜுனை (30) கைது செய்து 6 பவுன் நகைகளை பறிமுதல் செய்து அவரை கோவை சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story