வாலிபரை தாக்கியவர் கைது
திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் யுவராஜ்(வயது23). சமூக வலைதளத்தில் படம் ஒன்றை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்பூர் பழவஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த குணா(34) மற்றும்அவரது நண்பர்கள் அறிவழகன், விஜய் ஆகியோர் கருத்து கூறியதாகவும், இதனால் இவர்களுக்குள் சமூக வலைதளத்தில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கரைப்புதூர் ஊராட்சி அவரப்பாளையம் பகுதியில் யுவராஜ் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த குணா, அறிவழகன், விஜய் ஆகிய 3 பேரும் சேர்ந்து யுவராஜுடன் வாய்த்தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. இதில் யுவராஜை மற்ற 3 பேரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த அவர் பல்லடம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குணாவை கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.