சாலைப்பணிகள் தரமில்லை என்று கூறி கவுன்சிலர்களிடையே வாக்குவாதம்:குன்னூர் நகராட்சி கூட்டம் பாதியில் நிறுத்தம்

குன்னூர் நகராட்சி கூட்டத்தில், சாலைப்பணிகள் தரமில்லை என்று கூறி புகார் தெரிவித்து கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
குன்னூர்
குன்னூர் நகராட்சி கூட்டத்தில், சாலைப்பணிகள் தரமில்லை என்று கூறி புகார் தெரிவித்து கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
நகராட்சி கூட்டம்
குன்னூர் நகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம் மன்ற அரங்கில் நடைபெற்றது. நகராட்சி தலைவர் ஷீலா கேத்தரின் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வாசிம் ராஜா, ஆணையாளர் ஏகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நகராட்சி தலைவர் ஷீலா கேத்தரின், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார். பின்னர் 18-வது வார்டு கவுன்சிலர் ரங்கராஜன் தங்கள் வார்டில் ஒன்றரை ஆண்டுகளாக எந்த வளர்ச்சி பணிகளும் செய்ய நிதி வழங்காததால் வாயில் கருப்பு துணி கட்டி ஆணையாளர் ஏகராஜிடம் மனு அளித்தார்.
அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம்
பின்பு அ.தி.மு.க. கவுன்சிலர் சரவண குமார் பேசுகையில், குன்னூரில் பல பகுதிகளில் நகராட்சி சார்பாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை ஒப்பந்ததாரர்கள் சரிவர செய்யாததால் மக்கள் வரிப்பணம் வீணாகி உள்ளது. பலர் இதில் கமிஷன் பெறுவதால் சாலைகள் தரமில்லாமல் போடப்படுகிறது. இதற்கு ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்க உள்ளேன் என்று ஆவேசமாக கூறினார். இதனால் அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்காரணமாக கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு நகரமன்ற தலைவர் ஷீலா கேத்தரின் எழுந்து தனது அறைக்கு சென்றார். இதையடுத்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கோஷம் எழுப்பியவாறு மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது.






