நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம்


நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம்
x

ஒரே நேரத்தில் எழுந்து நின்று பேசியதால் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையில் நேரத்தை வீணடிக்க கூடாது என்று தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

ஒரே நேரத்தில் எழுந்து நின்று பேசியதால் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையில் நேரத்தை வீணடிக்க கூடாது என்று தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.

மன்ற கூட்டம்

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நேற்று சாதாரண கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் குடிநீர் பகிர்மான குழாய் அமைத்தல், தனி நபர் கழிப்பிடம் கட்டுதல் உளள்பட 41 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசும்போது கூறியதாவது:-

கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா (அ.தி.மு.க.):- மன்ற கூட்டத்தில் 41 தீர்மானங்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதில் 16 தீர்மானங்கள் தலைவரின் முன் அனுமதி பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் சில தீர்மானங்களுக்கு இந்த கூட்டத்தில் பொருள் வைக்கப்பட்டு, முன்கூட்டியே ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, தலைவரின் முன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை இல்லாத நடைமுறையை கூட்டத்திற்கு கொண்டு வருகின்றனர். எனவே 16 தீர்மானங்களுக்கு ஆட்சபணை செய்கிறேன். என் குப்பை என் பொறுப்பு திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குப்பைகளை அகற்றாததால் தேக்கம் அடைகிறது.

குப்பைகள் தேக்கம்

கவுன்சிலர் துரைபாய்:- எனது வார்டில் தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக சுகாதார பணிகள் பாதிக்கப்படுகிறது. இதனால் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. தூய்மை பணியில் ஈடுபடும் வயதான பெண்களை மாற்றி விட்டு ஆண்களை நியமிக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்ட பணிகளை வேகப்படுத்தி பணிகளை முடிக்க வேண்டும்.

கவுன்சிலர் நர்மதா:- முதல்-அமைச்சர் ஜனநாயக முறைப்படி கூட்டங்களை நடத்த வேண்டும் என்று கூறி உள்ளார். ஆனால் மன்ற கூட்டத்தில் வைக்கப்பட்டு உள்ள 50 சதவீத தீர்மானங்களுக்கு தலைவரின் முன் அனுமதி பெறப்பட்டு உள்ளது. இதனால் மன்ற கூட்டத்திற்கு பயன் இல்லாமல் போய் விடுகிறது. அதிக தீர்மானங்கள் வரும் போது அவசர கூட்டம் நடத்த வேண்டும். வாகனங்கள் பழுது பார்ப்பிற்கு உத்தேச செலவினம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. முழுவிவரம் கொடுக்க வேண்டும்.

வீணடிக்க கூடாது

நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கூறியதாவது:-

அவசிய, அவசர பணிகளுக்கு மட்டும் முன் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஒரு சிலர் ஏமாற்றுவதாக கூறி தேவையில்லாததை கூறுகின்றனர். தேவையான பணிகளுக்கு மட்டும் நிதி செலவு செய்யப்படுகிறது. மன்ற கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான கேள்விகளை கேட்கலாம். தேவையில்லாமல் கேள்விகளை கேட்டு நேரத்தை வீணடிக்க கூடாது.

மேலும் ஏமாற்றுவதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தீர்மானங்கள் போட்டு தான் பணிகளை செய்ய முடியும். முதல்-அமைச்சரின் ஆட்சியில் நகராட்சியில் சிறப்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் சலசலப்பு

முன்னதாக கவுன்சிலர் நர்மதா பேசிக் கொண்டிருக்கும் போது, சில கவுன்சிலர்கள் எழுந்து நின்று ஒரே கவுன்சிலர் திரும்ப, திரும்ப பேசுவதால் மற்ற கவுன்சிலர்கள் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போய் விடுகிறது என்றனர். அப்போது மன்ற கூட்டத்தில் சிறிது நேரம் கவுன்சிலர்கள் மாறி, மாறி பேசிக் கொண்டதால் சலசலப்பு ஆனது. இதற்கிடையில் வாக்குவாதமாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது நேரத்தை வீணடிக்க கூடாது என்று தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.


Next Story