குவாரியில் லாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம்


குவாரியில் லாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம்
x
தினத்தந்தி 22 Jun 2023 8:49 PM GMT (Updated: 23 Jun 2023 11:00 AM GMT)

குவாரியில் லாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி

கொள்ளிடம் டோல்கேட்:

திருச்சி மாவட்டம், கல்லணை சாலையில் உத்தமர்சீலி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. ஆற்றில் அள்ளப்படும் மணல் அருகில் உள்ள பட்டா நிலங்களில் சேமிக்கப்பட்டு, அங்கிருந்து லாரிகள் மூலம் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள 5 ஏக்கருக்கும் மேற்பட்ட பட்டா நிலத்திலும் மணல் அள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிளிக்கூடு பகுதியை சேர்ந்த ஒருவர் மணல் சேமிப்பு கிடங்கு அமைப்பதற்காக பட்டா நில உரிமையாளர்களிடம் குறிப்பிட்ட தொகைக்கு இடத்தை ஒப்பந்தம் செய்து, அங்கு மணல் குவாரி ஒப்பந்ததாரர்களிடம் அதிக தொகை வாங்கிக்கொண்டு மணல் அள்ள விடுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து உத்தமர்சீலி பகுதியை சேர்ந்த சிலர் தங்களது நிலத்தை அந்த தனிநபரிடம் ஒப்பந்தத்திற்கு கொடுக்காமல், மணல் குவாரி ஒப்பந்ததாரரிடம் நேரடியாக வழங்க முயன்றபோது, அந்த தனிநபர் மூலமாகவே வாங்க இயலும் என்று ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உத்தமர்சீலியை சேர்ந்த சிலர் மணல் குவாரியில் மணல் அள்ள வந்த லாரிகளை மறித்து, முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மணல் குவாரி ஒப்பந்ததாரர் தரப்பினர் நடத்திய பேச்சுவார்த்தையில், அவர்களுக்கு சொந்தமான பட்டா நிலங்களில் உரிய அனுமதியுடன் மணல் அள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story