தேர் பவனியின்போது தகராறு; ரவுடி உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு


தேர் பவனியின்போது தகராறு; ரவுடி உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு
x

தேர் பவனியின்போது தகராறு; ரவுடி உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திருச்சி

திருவெறும்பூர்:

திருவெறும்பூர் அருகே உள்ள மேல குமரேசபுரத்தில் புனித சகாய அன்னை ஆலயத்தின் 39-வது ஆண்டு தேர் பவனி நடைபெற்றது. இந்த தேர் பவனி தொடங்கியதில் இருந்து இரு தரப்பினரிடையே பிரச்சினைகள் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் நேற்று முன்தினம் அதிகாலை அசோக் நகர் பகுதியை சேர்ந்த சரவணகுமாரின் மகன்கள் கார்த்திக் குமார் (வயது 22), சுரேஷ்குமார் (22), பிரபல ரவுடியான கார்த்தி என்ற முயல் கார்த்தி, இவரது சித்தப்பா மகன் ரஞ்சித் ஆகிய 4 பேரும் தேரின் முன்பு ஆடிக்கொண்டு சென்றதால் பிரச்சினை ஏற்பட்டது.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த தாமஸ் ஆல்வா எடிசன் (53) என்பவர், கார்த்திக் குமார் உள்ளிட்ட 4 பேரையும் அரிவாளால் வெட்டியதாகவும், இதில் 4 பேருக்கும் கையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் கார்த்திக் குமார், சுரேஷ்குமார் ஆகியோர் அந்த பகுதியில் உள்ள தனது அக்காள் சத்யா வீட்டிற்கு சென்று மயங்கி விழுந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல் முயல் கார்த்தியும், ரஞ்சித்தும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால் தேர் ஓடும் வீதியில் ரத்த கறைகள் படிந்தன. இதனால் அப்பகுதியில் தேர் நிறுத்தப்பட்டது. மேலும் சாலையில் இருந்த ரத்த கறைகளை கழுவி சுத்தம் செய்த பின்னர் மீண்டும் ேதர் பவனி நடைபெற்றது. இந்த சம்பவத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேர் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் முயல் கார்த்தியின் கூட்டாளி பிரவீன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் தாமஸ் ஆல்வா எடிசனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story