தெருவில் விளையாடிய சிறுவர்களுடன் தகராறு:4 பேரை கத்தியால் குத்திய வியாபாரி கைது
போத்தனூரில் தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்களுடன் ஏற்பட்ட தகராறில் 4 பேரை கத்தியால் குத்திய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
போத்தனூர்
போத்தனூரில் தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்களுடன் ஏற்பட்ட தகராறில் 4 பேரை கத்தியால் குத்திய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பாத்திர வியாபாரி
கோவை போத்தனூர் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 26). பாத்திர வியாபாரி. இவர் நேற்று முன்தினம் வியாபாரத்தை முடித்து கொண்டு மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தார். அப்போது தெருவில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர்.
இதில் சிறுவர்கள் அடித்த பந்து கோபாலகிருஷ்ணன் வீட்டிற்குள் விழுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த கோபாலகிருஷ்ணன் அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அங்கு கிடந்த செங்கலை எடுத்து சிறுவர்களை நோக்கி வீசியதாக கூறப்படுகிறது.
கத்திக்குத்து
இதனால் அச்சம் அடைந்த அந்த சிறுவர்கள் இந்த சம்பவம் குறித்து தங்களது உறவினர்களான அந்த பகுதியை சேர்ந்த கண்ணன் (47), செந்தில்குமார் (39), சசிகுமார் (47), பிரதீப் (24) ஆகியோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கோபாலகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று அவரிடம், சிறுவர்களை விரட்டியது குறித்து கேட்டனர்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கோபாலகிருஷ்ணன் வீட்டில் இருந்த சுத்தியல், கத்தி உள்ளிட்டவற்றை எடுத்து கொண்டு கண்ணன், செந்தில்குமார், சசிகுமார், பிரதீப் ஆகிய 4 பேரையும் தாக்கினார். இதில் அவர்கள் 4 பேரும் பலத்த காயமடைந்தனர்.
உடனே அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 4 பேரை கத்தியால் குத்தியதாக கோபாலகிருஷ்ணனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.