ஆடல், பாடல் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்திய போலீசாருடன் வாக்குவாதம்


ஆடல், பாடல் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்திய போலீசாருடன் வாக்குவாதம்
x
தினத்தந்தி 19 Aug 2023 12:15 AM IST (Updated: 19 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புவனகிரி அருகே கோவில் திருவிழாவில் அனுமதியின்றி நடத்திய ஆடல், பாடல் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்திய போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூர்

புவனகிரி,

ஆடல், பாடல் நிகழ்ச்சி

புவனகிரி அருகே கீழமனக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா நடைபெற்றது. இதையொட்டி இன்னிசை நிகழ்ச்சி நடத்த கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். இது தொடர்பாக புவனகிரி போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்து, அனுமதியும் பெற்றனர். இந்த நிலையில் கோவிலில் இன்னிசை நிகழ்ச்சிக்கு பதிலாக ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தினர். இது பற்றி அறிந்ததும் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

போலீசாருடன் வாக்குவாதம்

உடனே போலீசார், கோவில் நிர்வாகிகளை சந்தித்து உங்கள் கோவில் திருவிழாவில் இன்னிசை நிகழ்ச்சி நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் நீங்கள் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்துகிறீர்கள். உடனடியாக ஆடல், பாடல் நிகழ்ச்சியை நிறுத்துங்கள் என்று கூறினர். மேலும் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் வைத்திருந்த மைக் உள்ளிட்ட சில உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்து, வாகனத்தில் ஏற்றினர்.

இதற்கு கிராம மக்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் தெரிகிறது.

7 பேர் மீது வழக்கு

இது குறித்து ஏட்டு சங்கர் புவனகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கீழ மனக்குடி கிராமத்தை சேர்ந்த மோகன், தினகர், அய்யப்பன், பரமசிவம், வீரமணி, பழனி, குழந்தைவேல் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story