சுருளிப்பட்டி அருகே இடம்பெயர்ந்த அரிக்கொம்பன் யானை: தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர்


சுருளிப்பட்டி அருகே இடம்பெயர்ந்த அரிக்கொம்பன் யானை: தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர்
x

அரிக்கொம்பன் யானை, சுமார் 10 கிலோமீட்டர் தூரம் இடம்பெயர்ந்து இன்று காலை சுருளிப்பட்டியில் உள்ள தோப்பில் முகாமிட்டுள்ளது.

தேனி,

கடந்த மாதம் பிடிக்கப்பட்டு பெரியார் புலிகள் காப்பகத்தில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை, தற்போது மீண்டும் கம்பத்திற்கு வந்துள்ளது. இதுவரை 18 பேரை கொன்று அட்டகாசம் செய்துவரும் இந்த யானை, மீண்டும் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த அரிக்கொம்பன் நேற்று தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்கு வந்து அங்குள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பதற்றம் அடைந்தனர். வனத்துறையினர் யானையை பின் தொடர்ந்து பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்த நிலையில், அங்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

கம்பம் மின்வாரிய அலுவலகம் அருகே வாழைத்தோட்டத்திற்குள் தஞ்சமடைந்த அரிக்கொம்பன் யானை, சுமார் 10 கிலோமீட்டர் தூரம் இடம்பெயர்ந்து இன்று காலை சுருளிப்பட்டியில் உள்ள தோப்பில் முகாமிட்டுள்ளது.

அரிக்கொம்பனை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க பொள்ளாச்சியில் இருந்து சுயம்பு என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டு உள்ளது. முதுமலையில் இருந்து மேலும் 2 யானைகள் வரவுள்ளதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

3 கும்கி யானைகளின் உதவியுடன் அரிக்கொம்பனை மயக்க ஊசி மூலம் பிடிக்கும் நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். பிடிக்கப்படும் அரிக்கொம்பனை சரணாலயங்கள் பகுதிகளில் விடும் பணிகள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story