முன்னாள் எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வனின் தோட்டத்திற்குள் புகுந்த அரிக்கொம்பன் யானை
அரிக்கொம்பன் யானை மேகமலை வனப்பகுதியில் ஏறியுள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
தேனி,
கடந்த மாதம் பிடிக்கப்பட்டு பெரியார் புலிகள் காப்பகத்தில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை, தற்போது மீண்டும் கம்பத்திற்கு வந்துள்ளது. இதுவரை 18 பேரை கொன்று அட்டகாசம் செய்துவரும் இந்த யானை, மீண்டும் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த அரிக்கொம்பன் நேற்று தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்கு வந்து அங்குள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பதற்றம் அடைந்தனர். வனத்துறையினர் யானையை பின் தொடர்ந்து பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்த நிலையில், அங்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
அரிக்கொம்பனை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க பொள்ளாச்சியில் இருந்து சுயம்பு என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டு உள்ளது. முதுமலையில் இருந்து மேலும் 2 யானைகள் வரவுள்ளதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அரிக்கொம்பன் யானை இன்று சுருளிப்பட்டியை அடுத்துள்ள கூத்தநாச்சியார் கோவில் வழியே முன்னாள் எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச் செல்வனின் தோட்டத்தில் புகுந்துள்ளது. அங்கு தோட்டத்தின் கம்பி வேலிகளை உடைத்து விட்டு அருகிலுள்ள மேகமலை வனப் பகுதியில் ஏறியுள்ளதாக தங்கத் தமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.