அரசு பெண் வக்கீல்-மகளுக்கு அரிவாள் வெட்டு
திருப்பூரில் அரசு பெண் வக்கீல் மற்றும் அவரது மகளை ஜாமீனில் வந்த வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அரிவாள் வெட்டு
திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜமீலா பானு (வயது 40). இவர் திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் அரசு வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் நிஷா (21). இவர் சேலம் அரசு சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று ஜமீலா பானு திருப்பூர் குமரன் ரோட்டில் தனியார் வணிக வளாகத்தில் உள்ள தன்னுடைய வக்கீல் அலுவலகத்தில் இருந்தார். அவருடன் மகள் நிஷாவும் அங்கு இருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் திடீரென ஜமீலா பானுவின் அலுவலகத்திற்குள் புகுந்தார். பின்னர் அவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜமீலா பானு, நிஷா ஆகியோரை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த இருவரும் வலி தாங்க முடியாமல் கூச்சல் போட்டதும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றார். இது தொடர்பாக அக்கம்பத்தினர் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இடையூறு
இது பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயங்களுடன் துடித்துக் கொண்டிருந்த ஜமீலா பானு, அவருடைய மகள் நிஷா ஆகியோரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சேலத்தில் நிஷா படிக்கும் அரசு சட்டக் கல்லூரியில் ஏற்கனவே படித்த திருப்பூர் பெரியதோட்டம் பகுதியை சேர்ந்த ரகுமான் கான் (25) என்பவர் நிஷாவுக்கு இடையூறு செய்து வந்ததாக தெரியவந்தது.
கைது-ஜாமீன்அரசு பெண் வக்கீல்-மகளுக்கு அரிவாள் வெட்டு
இதையடுத்து சேலம் கொண்டாலம்பட்டி போலீஸ் நிலையத்தில் ரகுமான் கான் மீது நிஷா புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ரகுமான்கானை கைது செய்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு ரகுமான்கான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த ரகுமான் கான் நேற்று திருப்பூரில் அலுவலகத்தில் இருந்த நிஷா மற்றும் அவருடைய தாய் ஜமீலா பானு ஆகியோரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது. இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அரிவாளால் வெட்டிவிட்டு, தப்பி சென்ற ரகுமான்கானை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூரில் அரசு பெண் வக்கீல் மற்றும் அவருடைய மகளை வாலிபர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.