இஸ்ரோவின் விண்வெளி கல்வி திட்டத்திற்கு அரியலூர் அரசு பள்ளி மாணவர் தேர்வு


இஸ்ரோவின் விண்வெளி கல்வி திட்டத்திற்கு அரியலூர் அரசு பள்ளி மாணவர் தேர்வு
x

இஸ்ரோவின் விண்வெளி கல்வி திட்டத்திற்கு அரியலூர் அரசு பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டார்

அரியலூர்

ஆண்டிமடம்:

நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி, இஸ்ரோ 75 செயற்கை கோள்களை விண்வெளிக்கு ஏவும் மெகா திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தில் தமிழகம் சார்பில், அகஸ்தியர் என்ற பெயரில் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இஸ்ரோவின் விண்வெளி கல்வி திட்டத்தில் பங்கு பெற தமிழகத்தில் இருந்து அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 75 பேர் கடந்த ஆகஸ்டு மாதம் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கு ஆன்லைன் மூலம் 26 மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் இருந்து 75 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் அரியலூர் மாவட்டம், கவரப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவர் சஞ்சய் வேலாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை, செயற்கைகோள் விஞ்ஞானிகள் ஆர்.எம். வாசகம், இளங்கோவன், வெங்கடேசன் ஆகியோர் செயற்கைகோள் தயாரிப்பு, அதன் செயல்பாடுகள் குறித்த வகுப்புகளை ஆன்லைன் மூலம் எடுத்தனர். இதைத்தொடர்ந்து மாணவர் சஞ்சய் வேலா, இஸ்ரோவில் நேரடியாக நடைபெற உள்ள பயிற்சி வகுப்பில் பங்கேற்க நாளை(புதன்கிழமை) அங்கு செல்ல உள்ளார். இதையடுத்து மாணவர் சஞ்சய் வேலாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து மாணவர் சஞ்சய் வேலா கூறுகையில், எனது அக்காள் மோனிஷா முயற்சியால் இதில் கலந்து கொண்டு 2-ம் கட்ட தேர்விலும் வெற்றி பெற்று இஸ்ரோ செல்ல உள்ளேன். மேலும் இஸ்ரோவிலும் நான் தேர்வு செய்யப்பட்டு ரஷ்யாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்குபெற வேண்டும். இஸ்ரோவில் விஞ்ஞானியாக ஆக வேண்டும் என்பதே எனது லட்சியம். ஆனால் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் எனக்கு யாரேனும் உதவிகள் செய்தால் நிச்சயமாக நான் அதை செய்து காண்பிப்பேன், என்று கூறினார்.


Next Story