அரியலூர் தொழிலாளி உடல்நலக்குறைவால் சாவு
மலேசிய முருகன் கோவிலுக்கு சென்ற அரியலூர் தொழிலாளி உடல்நலக்குறைவால் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொழிலாளி
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள இளையபெருமாள் நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி (வயது 48), தொழிலாளி. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் 2 பேருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. குவைத் நாட்டில் கடந்த 12 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த கொளஞ்சி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்தநிலையில் அவருக்கு இதயத்தில் ரத்த அடைப்பு காரணமாக அறுவை சிகிச்சை செய்துள்ளார். அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடந்தால் மலேசியாவில் உள்ள முருகன் கோவிலுக்கு வருவதாக வேண்டி இருந்ததாகவும், அதற்காக சுற்றுலா விசாவில் மலேசியா முருகனை காண கடந்த 8-ந்தேதி கொளஞ்சி விமானத்தில் சென்றுள்ளார்.
உடலை கொண்டு வர குடும்பத்தினர் கோரிக்கை
இதற்கிடையே அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கொளஞ்சி மலேசியாவில் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து, அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்து முறைப்படி அடக்கம் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி ராணி மற்றும் மகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.