வினாத்தாள் வைக்கப்பட்ட அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு


வினாத்தாள் வைக்கப்பட்ட அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 11 March 2023 12:15 AM IST (Updated: 11 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வையொட்டி வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வையொட்டி வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பிளஸ்-2 பொதுத்தேர்வு

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் உள்பட மொத்தம் 67 பள்ளிகள் உள்ளன.

இந்த நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்கி, அடுத்த மாதம்(ஏப்ரல்) 3-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடக்கிறது. பிளஸ்-2 தேர்வை மாணவர்கள் 4,143 பேரும், மாணவிகள் 4,437 பேரும் சேர்த்து மொத்தம் 8,580 பேர் எழுதுகின்றனர். அவர்கள் தேர்வு எழுதுவதற்கு 35 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இது தவிர தனித்தேர்வர்களுக்கு பொள்ளாச்சி லதாங்கி பள்ளியிலும், வால்பாறை அரசு பள்ளியிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

போலீஸ் பாதுகாப்பு

இதையடுத்து பிளஸ்-1 தேர்வு வருகிற 14-ந் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வை மாணவர்கள் 3,454 பேரும், மாணவிகள் 4,163 பேரும் சேர்த்து மொத்தம் 7,617 பேர் எழுதுகின்றனர். தனித்தேர்வர்களுக்கான மையம் உள்பட மொத்தம் 37 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதையொட்டி பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்விற்கு வினாத்தாள்கள் பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் வினாத்தாள் வைக்கப்பட்டு உள்ள அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பறக்கும் படை

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகளுக்கு கோவை முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு லாரியில் வினாத்தாள்கள் கொண்டு வரப்பட்டது. பின்னர் வினாத்தாள்கள் அறைகளில் வைத்து, பூட்டி சீல் வைக்கப்பட்டது. அந்த அறைகளுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதேபோன்று வால்பாறை, கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் வினாத்தாள்கள் வைக்கப்பட்டு உள்ள அறைகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் அந்தந்த தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் கொண்டு செல்லப்படும். மையங்களில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story