கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
திருப்பூர்


நத்தக்காடையூர் அருகே கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ் பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள பவானிசாகர் அணையில் இருந்து கடைமடை பகுதியான கரூர் மாவட்டம், அஞ்சூர் வரை கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் கால்வாயில் சீரமைப்பு என்ற பெயரில் கால்வாயை சேதப்படுத்தியும், பழைய கட்டுமான பணிகளை தாமதப்படுத்தி, தாமதமாக சீரமைப்பு வேலைகளை செய்து வரும் ஒப்பந்ததாரர்கள், நீர்வளத் துறை அதிகாரிகளை கண்டித்தும், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ் பவானி பாசன இயக்கத்தின் சார்பில் நத்தக்காடையூர் அருகே உள்ள வெள்ளியங்காடு பஸ் நிறுத்தம் அருகில் கீழ்பவானி பாசன கால்வாய் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் மு.ரவி தலைமை தாங்கினார். இதில் பாசன பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கீழ்பவானி பாசன கால்வாயை நவீனப்படுத்துதல், புதுப்பித்தல், விரிவாக்கம் என்ற திட்டத்தின் அரசு ஆணையை உடனடியாக ரத்து செய்ய கோரியும், கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

குடிநீர் ஆதாரம்

மேலும் விவசாயிகள் அனைவருக்கும் கீழ்பவானி பாசன திட்டத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் சமச்சீரான தண்ணீர் கிடைக்கும் வகையில் நீர் மேலாண்மை செய்வதற்கு ரஸ்கர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கால்வாயை தூர்வாரி கடைமடை வரை தண்ணீர் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பனை மரங்களை நடவு செய்து மண் கரையை பலப்படுத்த வேண்டும்.

கீழ்பவானி பாசன கால்வாய் சீரமைப்பு பணிக்கு நபார்டு வங்கியிடம் இருந்து பெறப்பட்ட சுமார் ரூ.750 கோடியை உடனடியாக திரும்பி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அடுத்த மாதம் (ஆகஸ்டு) ் 11-ந் தேதி ஈரோடு கோண வாய்க்கால் நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்பது உட்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.


Next Story