திருப்பூரில் தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்கள் 2 பேரை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக மணிப்பூர் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மணிப்பூரில் ஆளும் பா.ஜனதா அரசு பதவி விலக வேண்டும் என்றும், மத்திய அரசை கண்டித்தும் தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் மகளிர் அணி சார்பில் திருப்பூர் ரெயில் நிலையம் முன் பெரியார்-அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை நடைபெற்றது.
மகளிர் அணியின் பிரச்சார குழு செயலாளர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் பெண்கள் மீதான வன்முறை தாக்குதலை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் 1-வது மண்டல தலைவர் உமாமகேஸ்வரி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலைச்செல்வி, தொண்டர் அணி அமைப்பாளர் ஆனந்தி, துணை செயலாளர் நந்தினி உள்பட திரளான பெண்கள் பங்கேற்றனர். மேலும் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், பி.ஆர்.செந்தில்குமார், செந்தூர் முத்து, தெற்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ் மற்றும் மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, வார்டு மகளிர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.