கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரம் கல்வி மாவட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தாராபுரம் கல்வி மாவட்ட தலைவர் இரா.குப்புசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் தொடக்கக்கல்வித் துறையில் முறைகேடாக விதிகளுக்குப் புறம்பாக தொடர்ந்து நிர்வாக மாறுதல்கள் வழங்கப்பட்டு வருவதைக் கண்டிக்கிறோம். முறைகேடாக வழங்கப்பட்ட நிர்வாக மாறுதல்களை ரத்து செய்து ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை மறைமுகமின்றி, நேர்மையாக நடத்திட வலியுறுத்தவேண்டும். ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு தேவையில்லை என்ற கொள்கை முடிவை தமிழ்நாடு அரசு எடுத்து, ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் எஞ்சிய மாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்திட வலியுறுத்தியும் கோஷங்ககள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின் போது திருப்பூர் மாவட்ட துணை செயலாளர் அருள்ஜோதி செல்வன், உடுமலை கல்வி மாவட்ட தலைவர் சீனிவாச ராகவன், குடிமங்கலம் வட்டார செயலாளர் மகாலிங்கம், உடுமலை வட்டார செயலாளர், மடத்துக்குளம் வட்டார செயலாளர், மூலனூர் வட்டார செயலாளர் கணேசன் மற்றும் ஊரக வளர்ச்சி ஒய்வு பெற்றோர் நலசங்கத்தின் மாவட்ட தலைவர் ஆ.மணியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் உடுமலை வட்டார துணை செயலாளர் சுஜாதா நன்றி தெரிவித்தார்.