புத்தேரி பெரிய குளத்தில் படகு சவாரி விட ஏற்பாடு


புத்தேரி பெரிய குளத்தில் படகு சவாரி விட ஏற்பாடு
x
தினத்தந்தி 18 Nov 2022 6:45 PM GMT (Updated: 18 Nov 2022 6:45 PM GMT)

நடைபாதை, சைக்கிள் பயிற்சி மேற்கொள்ளும் வசதியுடன் புத்தேரி பெரியகுளத்தில் படகு சவாரி விட திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கலெக்டர் அரவிந்த் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நடைபாதை, சைக்கிள் பயிற்சி மேற்கொள்ளும் வசதியுடன் புத்தேரி பெரியகுளத்தில் படகு சவாரி விட திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கலெக்டர் அரவிந்த் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

புத்தேரி குளத்தில் கலெக்டர் ஆய்வு

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட புத்தேரி பெரியகுளம் மழைக்காலங்களில் நிரம்பி ஏரிபோல ரம்மியமாக காட்சியளிக்கும். இந்த குளத்தின் கரையை அழகுப்படுத்தி பொழுதுபோக்கு அம்சம் நிரம்பிய பகுதியாக மாற்றுமாறு பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்து வந்தது. இதனை தொடர்ந்து புத்தேரி பெரிய குளத்தில் படகு சவாரி உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேற்று வடசேரி பெரிய குளத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது குளத்தை தூர்வாரி அதனை மேம்படுத்த என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து மாநகர ஆணையர் ஆனந்த் மோகனுடன் ஆலோசனை நடத்தினார்.

நடைபாதை- படகு தளம்

மேலும் புத்தேரி குளத்தை தூர்வாரி ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் இருபுறமும் அலங்கார நடைபாதை அமைத்தல், சைக்கிள் பயிற்சி மேற்கொள்ளும் பாதை, உணவகம், படகுத்தளம், படகு விடுதி மற்றும் சுரங்கப்பாதையில் அலங்கார விளக்குகள் அமைத்தல் போன்றவை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

பாசனத்துக்கு இடையூறு இல்லாமலும், நீர்ப்பிடிப்பு பகுதி குறையாமலும் புத்தேரி பெரியகுளத்தை பொதுமக்கள் பொழுதுபோக்கு பயன்பாட்டுக்கான திட்டங்கள் வகுப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. இதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.4 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், முதல் கட்டமாக ரூ.1 கோடியே 6 லட்சம் நிதி தேவைப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திட்டம் நிறைவேற்றுவது தொடர்பான வரைபடமும் தயாரிக்கப்பட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண்மை

ஆய்வின் போது மாநகராட்சி நிர்வாக அலுவலர் ராம்மோகன், பொறியாளர் பாலசுப்பிரமணியன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரப்பிரிவு செயற் பொறியாளர் ராஜா, கவுன்சிலர் ஸ்ரீலிஜா மற்றும் ரெயில்வே அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

இதனை தொடர்ந்து வடசேரியில் செயல்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தையும் கலெக்டர் அரவிந்த், மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.


Next Story