மாணவ, மாணவிகள் பள்ளி செல்வதற்கு வேன் ஏற்பாடு
மாணவ, மாணவிகள் பள்ளி செல்வதற்கு வேன் ஏற்பாடு செய்யப்பட்டது.
திருப்புவனம்,
திருப்புவனம் யூனியனை சேர்ந்தது வயல்சேரி கிராமம். இங்கிருந்து கரிசல்குளம், தச்சனேந்தல், ரெட்டகுளம் உள்பட பல கிராமங்கள் செல்லும் தார்சாலை உள்ளது. இந்த தார்சாலையின் நடுவே கிருதுமால் நதியின் மேல் சிறு பாலம் கட்டப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் கிருதுமால் நதியில் தண்ணீர் அதிகரித்து பாலம் இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதேபோல் புளியங்குளம் விலக்கிலிருந்து வாடி கிராமத்திற்கு செல்லும் தரை பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால் வாடி கிராமத்திற்கும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் கிராமத்தில் உள்ள 22 மாணவ, மாணவிகள் வெளியூர்களில் உள்ள பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையே வாடி கிராமத்தை பார்வையிட வந்த கலெக்டரிடம், கிராம மக்கள், மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல உதவுமாறு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கலெக்டரின் உத்தரவின்பேரில் வேன் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி தினமும் காலை மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிகளில் இறக்கி விடவும், மாலை அதே போல் மாணவ, மாணவிகளை ஏற்றி வந்து விடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம், திருப்புவனம் தாசில்தார் கண்ணன் ஆகியோர் செய்தனர்.