சிரசு திருவிழாவில் பக்தர்கள் நெரிசலின்றி வர ஏற்பாடு செய்ய வேண்டும்
கெங்கையம்மன் திருவிழாவில் பக்தர்கள் நெரிசலின்றி வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
குடியாத்தம்,
கெங்கையம்மன் திருவிழாவில் பக்தர்கள் நெரிசலின்றி வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கெங்கை அம்மன் சிரசு திருவிழா
குடியாத்தத்தில் ெகங்கை அம்மன் கோவில் சிரசு திருவிழா பிரசித்தி பெற்றதாகும். வருகிற 14-ந்் தேதி தேர் திருவிழாவும், 15-ந் தேதி அம்மன் சிரசு ஊர்வலமும், 17-ந்் தேதி பூப்பல்லக்கும் நடக்கிறது.
திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பன்னீர்செல்வம், நீர்வளத்துறை உதவி பொறியாளர் ராஜேஷ், அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் விநாயகம், தீயணைப்பு நிலை அலுவலர் மகேந்திரன், குடியாத்தம் நகராட்சி நகரமைப்பு அலுவலர் சீனிவாசன், தூய்மை பணி மேற்பார்வையாளர் பிரபுதாஸ், உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
கெங்கையம்மன் கோவில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு வரவேற்றார்.
குடிநீர் குழாய்கள்
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ.கலந்து கொண்டார்.
கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாவது:-
கோவில் அருகாமையில் ஆற்றில் தற்காலிக குடிநீர் குழாய்கள் அமைத்து தர வேண்டும்.
பக்தர்கள் வசதிக்காக தற்காலிகமாக நகரும் கழிப்பறைவுகளை அமைத்து தர வேண்டும். தேர் செல்லும் சாலைகளில் உள்ள மேடு பள்ளங்களை கான்கிரீட் கலவையால் சரி செய்ய வேண்டும்.
திருவிழாவை முன்னிட்டு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும், தேர் சொல்லும் பாதையிலும், அம்மன் சிரசு சேரும் பாதையிலும் தீயணைப்பு துறையினர் பணியில் இருக்க வேண்டும். மருத்துவ முகாம் அமைக்க வேண்டும், காவல்துறை சார்பில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை அமைத்து கண்காணிக்க செய்ய வேண்டும்.
சிரசு திருவிழா முன்பாக மக்கள் நெரிசலை தவிர்க்க ஒரு வழிப்பாதை அமைத்து போக்குவரத்தை எளிதாக்க வேண்டும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்க வேண்டும் உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இரவு 8 மணி வரை...
தொடர்ந்து தேரோட்டத்தின்போது மாலை 6 மணிக்குள் நிலைக்கு வர வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
அப்போது விழா குழுவினர் பக்தர்கள் வசதிக்காகவும் வெளியூரிலிருந்து பக்தர் வருவதாகவும் இரவு 8 மணி வரை தேரோட்டம் நடைபெற அனுமதிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.
கோவிலுக்குள் பக்தர்கள் நெரிசல் இன்றி உள்ளே செல்லவும் வெளியே வரவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் கெங்கையம்மன் கோவில் ஊர் நாட்டாண்மை ஆர்.ஜி.சம்பத், திருப்பணி கமிட்டி தலைவர் ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் கலைவாணி நன்றி கூறினார்.