மரங்கள் வெட்டி கடத்திய வழக்கில் 6 பேர் கைது


மரங்கள் வெட்டி கடத்திய வழக்கில் 6 பேர் கைது
x
தினத்தந்தி 15 July 2023 6:40 PM GMT (Updated: 16 July 2023 10:15 AM GMT)

பல்லடம் அருகே மரங்கள் வெட்டி கடத்திய வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர்

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

20 மரங்கள் கடத்தல்

பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சியில் வி.ஐ.பி. நகர் அமைந்துள்ளது. அங்கு சுமார் 10 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு வேப்பன், வாகை, புங்கன் போன்ற பல்வேறு வகையான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள வேப்ப மரங்கள் பலவற்றை சிலர் ஊராட்சி சார்பில் வெட்டச்சொன்னதாக கூறி 20-க்கும் மேற்பட்ட வேப்ப மரங்களை வெட்டி கடத்தியுள்ளனர்.

இதுகுறித்து பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

6 பேர் கைது

இந்த நிலையில் நேற்று குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப் -இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார், மாதப்பூர் நல்லா கவுண்டம்பாளையம் பகுதியில், ரோந்து சுற்றி வந்தனர். அப்போது போலீசாரை கண்டவுடன் அந்தப் பகுதியில் இருந்த சிலர் எழுந்து ஓட முயற்சித்தனர். ஆனால் அவர்களை சுற்றி வளைத்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள், வி.ஐ.பி. நகரில் 20-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி கடத்தியது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் மாதப்பூர் கதர்க்கடை வீதியைச் சேர்ந்த வீரமணி (வயது 33), அதே பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் (34), திருமலைச்சாமி (25), வெங்கடாசலம் (43), தனலிங்கசாமி (28), சக்திவேல் (57),ஆகிய ஆறு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story