வழிப்பறி, லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது


வழிப்பறி, லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x

வழிப்பறி, லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

சேலம் தாதகாப்பட்டி சண்முகா நகர் பகுதியை சேர்ந்தவர் தனுஷ் (வயது 21). அம்மாப்பேட்டை பச்சப்பட்டியை சேர்ந்தவர் விக்ரம் (20). இவர்கள் மீது கடந்த 8-ந் தேதி செவ்வாய்பேட்டை தேவாங்கர் விரிவாக்க பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை திருடியதாக செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நிலுவையில் உள்ளது.

இதேபோல், கொண்டப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த சதீஸ்குமார் என்பவர் கடந்த 10-ந் தேதி சீத்தாராமன்செட்டி ரோடு அருகே நடந்து சென்றார். அப்போது அவரை தனுஷ் மற்றும் விக்ரம் ஆகியோர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.1,950-ஐ வழிப்பறி செய்தனர்.

இது குறித்த புகாரின்பேரில் செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் மீது வாகன திருட்டு, வீடு புகுந்து திருடியது, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இதேபோல், சேலம் தாதகாப்பட்டி மூணாங்கரடு 2-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (32). இவர் கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளின் நம்பர்களை ஒரு துண்டு சீட்டில் எழுதிக்கொடுத்து நிறைய பரிசு விழும் எனக்கூறி விற்பனை செய்து வந்தார். பின்னர் அவரை அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர். பின்னர் அந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அவர், கடந்த 5-ந் தேதி தாதகாப்பட்டி பகுதியில் மீண்டும் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததும், பரிசு தொகை கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த சிலர் பணத்தை திருப்பி கேட்டபோது அவர்களை மணிமாறன் மிரட்டல் விடுத்து வந்ததாகவும் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தனுஷ், விக்ரம் ஆகியோர் தொடர் திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாலும், மணிமாறன் என்பவர் தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாலும் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு போலீஸ் கமிஷனருக்கு அன்னதானப்பட்டி போலீசார் பரிந்துரை செய்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி நேற்று உத்தரவிட்டார்.


Next Story