நாமக்கல் அருகே பெண் கூட்டு பலாத்காரம்; மேலும் ஒருவர் கைது
நாமக்கல் அருகே பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்:
கூட்டு பலாத்காரம்
நாமக்கல்லை சேர்ந்த 31 வயது விதவை பெண் ஒருவர் கடந்த 19-ந் தேதி திருச்செங்கோட்டை சேர்ந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர் ஒருவருடன் நாமக்கல் அருகே உள்ள வீசாணம் ஏரி பகுதியில் பேசி கொண்டு இருந்தார். இரவு அந்த பகுதிக்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவர்கள் 2 பேரையும் மிரட்டி, 1¼ பவுன் நகை மற்றும் ரூ.2 ஆயிரத்தை பறித்து கொண்டது. மேலும் அங்கிருந்த பயனற்று கிடந்த கட்டிடத்திற்கு அந்த பெண்ணை அழைத்து சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. பலாத்காரம் செய்ததை அந்த கும்பல் செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பெண்ணை பலாத்காரம் செய்த நவீன்குமார் (வயது 21), தினேஷ்குமார் (21), முரளி (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த வீசாணத்தை சேர்ந்த பிரேம்குமார் (20) என்பவரை தேடி வந்தனர்.
மேலும் ஒருவர் கைது
இதற்கிடையே பிரேம்குமார் நாகப்பட்டினத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் பிரேம்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை நாமக்கல் முதலாவது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு செல்வராஜ் ஜூன் மாதம் 10-ந் தேதி வரை பிரேம்குமாரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.