ஓசூரில் பிரபல ரவுடியை கொல்ல திட்டம்: நெல்லை, தூத்துக்குடி கூலிப்படையினர் உள்பட 5 பேர் கைது-பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்


ஓசூரில் பிரபல ரவுடியை கொல்ல திட்டம்: நெல்லை, தூத்துக்குடி கூலிப்படையினர் உள்பட 5 பேர் கைது-பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்
x

ஓசூரில் பிரபல ரவுடி கஜாவை கொலை செய்வதற்காக வந்த நெல்லை, தூத்துக்குடியை சேர்ந்த கூலிப்படையினர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

பிரபல ரவுடி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் கஜா என்கிற கஜேந்திரன் (வயது 35). பிரபல ரவுடி. இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. 3 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை சென்றவர். இவருக்கும், ஓசூர் பிரபல ரவுடி கொற கோபியின் கூட்டாளிகளுக்கும், மேலும் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், ரவுடி கஜாவை தீர்த்து கட்டுவதற்காக கூலிப்படை கும்பல் ஓசூருக்கு வந்துள்ளதாக உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில் ஓசூர் அட்கோ போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

5 பேர் கைது

அப்போது ஓசூர் சுண்ணாம்புஜீபி பகுதியில் அந்த கூலிப்படை கும்பல் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று ஓசூர் பெரியார் நகரை சேர்ந்த மோகன் (40), நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த கருப்பசாமி என்கிற கருத்தபாண்டி (32), முக்கூடலை சேர்ந்த சிவன்பாண்டி (30), தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சரவணகுமார் என்கிற சங்கர் (34), ஸ்ரீவைகுண்டம் முறப்பநாடு பகுதியை சேர்ந்த சின்னதம்பி (24) ஆகிய 5 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

ஓசூர் செம்பட தெரு ராஜி என்கிற ராஜா (32), ஓசூர் பேகேப்பள்ளி அய்யசாமி பிள்ளை தெரு சாம்ராட் (32), இவரது நண்பர் ஒருவர் என 3 பேர் தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கைதானவர்களிடம் இருந்து கத்திகள், அரிவாள்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டுக்கல் ரவுடியின் கூலிப்படை

கைதான மோகன் மற்றும் தப்பி ஓடிய ராஜி, சாம்ராட் உள்ளிட்டோர் ஓசூரின் பிரபல ரவுடியாக விளங்கிய கொற கோபியின் கூட்டாளிகள் ஆவார்கள். கொற கோபி கடந்த 2019-ம் ஆண்டு இறந்து விட்டார். இவரது கூட்டாளிகளுக்கும், ரவுடி கஜாவிற்கும் இடையே நீண்ட காலமாக முன்விரோதம் உள்ளது. இதனால் கஜாவை தீர்த்து கட்ட அவர்கள் முடிவு செய்தார்கள்.

இதற்காக அவர்கள், திண்டுக்கல் பிரபல ரவுடி கண்ணபிரானின் கூட்டாளிகளான கூலிப்படையினர் கருப்பசாமி, சரவணகுமார், சின்னதம்பி, சிவன்பாண்டி ஆகியோரை ஓசூருக்கு வரவழைத்தனர். இவர்கள் ரவுடி கஜாவின் நடவடிக்கைகளை கண்காணித்து அவரை தீர்த்து கட்ட திட்டம் போட்டனர். இந்த தகவல் போலீசாருக்கு தெரிய வந்ததால் கூலிப்படையினர் உள்ளிட்ட ரவுடி கும்பல் பிடிபட்டு உள்ளனர். தற்போது கைதாகி உள்ள கருப்பசாமி, சரவணகுமார், சின்னதம்பி, சிவன்பாண்டி மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் தப்பி ஓடி தலைமறைவான மற்ற ரவுடிகளையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story