இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற அகதி உள்பட 2 பேர் கைது


இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற அகதி உள்பட 2 பேர் கைது
x

ராமேசுவரத்தில் இருந்து கள்ளத்தனமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற அகதி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து கள்ளத்தனமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற அகதி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணை

ராமேசுவரம் ரெயில்வே நிலையம் அருகே சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த 2 பேரை கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் மகேசுவரி தலைமையில் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அதில் ஒருவர் இலங்கையை சேர்ந்த கீர்த்தனன்(வயது 30) என்பதும், இவர் கடந்த 2020-ம் ஆண்டு இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து அங்கிருந்து லண்டன் செல்ல திட்டமிட்டு போலி ஆதார் அட்டை மூலம் வங்கதேசம் சென்று உள்ளார். வங்கதேசம் சென்ற இவரை அங்குள்ள போலீசார் போலி ஆதார் அட்டை, பாஸ்போர்ட் மூலம் வந்ததாக கைது செய்து சிறையில் அடைத்ததும் தெரியவந்தது.

7 மாத சிறைவாசத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்ட கீர்த்தனன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் சென்னை வந்துள்ளார். சென்னை வந்த இவர் கள்ளத்தனமாக இலங்கை செல்ல திட்டமிட்டு உள்ளார்.

இதைதொடர்ந்து ராமேசுவரம் புதுரோடு பகுதியை சேர்ந்த ஏஜெண்டு முத்துக்குமரன்(40) என்பவரை தொடர்பு கொண்டார். அதற்காக ரூ.40 ஆயிரம் தரவேண்டும் என பேரம் பேசி அதில் ரூ.10 ஆயிரத்தை முன்பணமாக ஏஜெண்டிடம் இலங்கை அகதி கொடுத்துள்ளார்.

சந்தேகம்

இதையடுத்து நேற்றுமுன்தினம் இரவு தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் இருந்து படகில் ஏற்றி இலங்கைக்கு அனுப்புவதாக ஏஜெண்டு இவரை ராமேசுவரம் வரவழைத்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கீர்த்தனன், முத்துக்குமரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகள் அவ்வப்போது தமிழகம் வரும் நிலையில் இலங்கை வாலிபர் ஒருவர் ராமேசுவரத்தில் இருந்து கள்ளத்தனமாக படகு மூலம் தப்பிச்செல்ல முயன்றது உளவு பிரிவு போலீசார் மத்தியில் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story