தலைவாசல் அருகே அக்காள் கணவர், மாமனாருக்கு கத்திக்குத்து-லேப் டெக்னீசியன் கைது
தலைவாசல் அருகே அக்காள் கணவர், மாமனாரை கத்தியால் குத்திய லேப் டெக்னீசியனை போலீசார் கைது செய்தனர்.
தலைவாசல்:
குடும்ப தகராறு
தலைவாசல் அருகே உள்ள வீரகனூர் கொல்லர் தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் ரங்கநாதன் (வயது 30). இவருடைய மனைவி திவ்யபிரியா (26). கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று மாலையும் குடும்ப தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து திவ்யபிரியா பெரம்பலூரில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வரும் தனது தம்பி திவாகருக்கு (24) தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர் வீரகனூர் வந்து ரங்கநாதனிடம் வாக்குவாதம் செய்தார். இதில் அவர்களுக்கிடையே தகராறு முற்றியது.
கத்திக்குத்து
இதனால் ஆத்திரம் அடைந்த திவாகர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரங்கநாதனை குத்தினார். இதனை தடுக்க வந்த கலியமூர்த்திக்கும் கத்திக்குத்து விழுந்தது. அங்கிருந்தவர்கள் கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வீரகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திவாகரை கைது செய்தனர். குடும்ப தகராறில் அக்காள் கணவர், மாமனார் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் வீரகனூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.