பள்ளிபாளையம் அருகே பெண் கொலை: 'சம்பள பணத்தை தராததால் கட்டையால் அடித்து கொன்றேன்' கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்


பள்ளிபாளையம் அருகே பெண் கொலை:  சம்பள பணத்தை தராததால் கட்டையால் அடித்து கொன்றேன்  கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
x

பள்ளிபாளையம் அருகே சம்பள பணத்தை தராததால் ஆத்திரமடைந்து கட்டையால் அடித்து பெண்ணை கொன்றதாக கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே சம்பள பணத்தை தராததால் ஆத்திரமடைந்து கட்டையால் அடித்து பெண்ணை கொன்றதாக கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

வாலிபர்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த கருந்தேவன்பாளையத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவருடைய மனைவி மல்லிகா (வயது 55). இவர்களுக்கு சண்முகம் (30) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சண்முகம் கோவையில் கிரில் கேட் அமைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரிடம் கருந்தேவன்பாளையத்தை சேர்ந்த சின்ராசு (29) என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சின்ராசுக்கு, சண்முகம் பணம் கொடுக்க வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி மல்லிகா வீட்டில் இருந்தபோது அங்கு சென்ற சின்ராஜ் பணம் சம்பந்தமாக கேட்டபோது ஏற்பட்ட தகராறில் கட்டையால் அடித்ததில் மல்லிகா இறந்தார். இதையடுத்து சின்ராசு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த கொலை தொடர்பாக பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்ராசுவை தேடி வந்தனர்.

சரண்

இந்த நிலையில் நேற்று சின்ராசு காடச்சநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் தேவராஜனிடம் சரணடைந்தார். இதையடுத்து அவரை பள்ளிபாளையம் போலீசில் கிராம நிர்வாக அலுவலர் ஒப்படைத்தார். பின்னர் சின்ராசுவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் மல்லிகா மகன் சண்முகத்திடம் கோவையில் வேலை செய்து வந்தேன்.

ஆனால் அவர் வேலைக்கான சம்பளத்தை தரவில்லை. இதுகுறித்து சண்முகத்திடம் கேட்டபோது, அவர் தனது தாயாரிடம் பணத்தை கொடுத்துள்ளேன் ஊருக்கு சென்று வாங்கிக் கொள்ளுமாறு கூறினார். இதையடுத்து கருந்தேவன்பாளையத்தில் உள்ள சண்முகம் வீட்டுக்கு சென்றேன். அங்கு அவருடைய தாயார் மல்லிகாவிடம் பணத்தை தருமாறு கேட்டேன்.

சிறையில் அடைப்பு

ஆனால் அவர் என்னிடம் பணம் இல்லை என்று கூறினார். இதனால் எங்களுக்கு தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்து அங்கிருந்த கட்டையை எடுத்து மல்லிகா தலை, முகத்தில் அடித்தேன். இதில் அவர் இறந்து விட்டார். இதையடுத்து அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாக இருந்தேன். தற்போது போலீசார் தேடுவதை அறிந்து பயந்து கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து சின்ராசுவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story