உறவினர் வீட்டில் 48 பவுன் நகைகளை திருடிய இளம்பெண் கைது
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உறவினர் வீட்டில் 48 பவுன் நகைகளை திருடிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உறவினர் வீட்டில் 48 பவுன் நகைகளை திருடிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
நகைகள் திருட்டு
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுக்காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா (வயது70). கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவருடைய வீட்டு பிரோவில் இருந்த 48 பவுன் நகைகள் திருட்டுப்போனது.
இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பெண் மீது சந்தேகம்
இந்தநிலையில் கருப்பையாவின் தம்பி சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் கிருஷ்ணா நகரை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் கவுசல்யா (22) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கருப்பையாவின் மனைவி இறந்த துக்க நிகழ்ச்சிக்கு வந்தபோது அவருடைய வீட்டு பீரோவில் இருந்த 48 பவுன் நகைகளை திருடி எடுத்து சென்றதை கவுசல்யா ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
28 பவுன் பறிமுதல்
இதனையடுத்து முதல் கட்டமாக கவுசல்யாவிடம் இருந்த 28 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மீதம் உள்ள நகைகளை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். மேலும் இந்த திருட்டு வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.