அம்மிக்கல்லை தலையில் போட்டு பெண் கொலை: வனப்பகுதியில் பதுங்கி இருந்த தொழிலாளி கைது


அம்மிக்கல்லை தலையில் போட்டு பெண் கொலை: வனப்பகுதியில் பதுங்கி இருந்த தொழிலாளி கைது
x

ஓமலூர் அருகே அம்மிக்கல்லை தலையில் போட்டு பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், வனப்பகுதியில் பதுங்கி இருந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

ஓமலூர்:


பெண் காய்கறி வியாபாரி

ஓமலூரை அடுத்த தும்பிப்பாடி ஊராட்சி ரெட்டியூர் காலனியை சேர்ந்தவர் சாமிநாதன். இவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 52). சாமிநாதன் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் பழனியம்மாள் காய்கறி வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தார்.

இவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மாது (37). பெயிண்டு அடிக்கும் தொழிலாளியான இவருக்கும், பழனியம்மாளுக்கும் இடையே பாதை தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கொலை

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாது, மதுபோதையில் பழனியம்மாளிடம் பாதை தொடர்பாக தகராறில் ஈடுபட்டார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாது, பழனியம்மாளை தாக்கி கீழே தள்ளினார். மேலும் அங்கிருந்த அம்மிக்கல்லை எடுத்து அவரது தலையில் போட்டார். பின்னர் மாது அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அம்மிக்கல்லால் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த பழனியம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தப்பி ஓடி தலைமறைவான மாதுவையும் தேடி வந்தனர்.

கைது

இதனிடையே தலைமறைவான மாதுவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் மாது ஏற்காடு வனப்பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது காஞ்சேரி காப்புக்காட்டில் பதுங்கி இருந்த மாதுவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story