கஞ்சா விற்பனை செய்த 56 பேர் கைது
கஞ்சா விற்பனை செய்ததாக 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ெதரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
56 பேர் கைது
தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. மயில்வாகனன் மேற்பார்வையில் சிவகங்கை மாவட்டத்தில் ஒவ்வொரு உட்கோட்ட அளவிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீதும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை சிவகங்கை மாவட்டத்தில் 28 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளில் 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய 9 வாகனங்களும், அவர்களிடம் இருந்து 20 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சொத்துகள் முடக்கம்
மேலும், இந்த வழக்குகளில் தொடர்புடைய 40 பேர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா தொழில் செய்வது சட்டப்படி குற்றமாகும். எனவே கஞ்சா விற்பனை செய்பவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் வங்கி கணக்கு, சொத்துக்களை முடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அத்துடன் கஞ்சா விற்பனை செய்பவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.