பர்தா அணிந்து வந்து போலி நகையை கொடுத்து 7¾ பவுன் நகையை மோசடி செய்த பெண்கள் உள்பட 3 பேர் கைது


ஓமலூர் அருகே நகைக்கடைக்குள் பர்தா அணிந்து வந்து போலி நகையை கொடுத்து 7¾ பவுன் நகையை மோசடி செய்த பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

ஓமலூர்:

நகைக்கடை

ஓமலூர் அருகே பொம்மியம்பட்டி கோம்பை பகுதியை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 47). இவர் நாச்சினம்பட்டி பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி மதியம் அவரது நகைக்கடைக்கு சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பர்தா அணிந்து வந்துள்ளார். அந்த பெண் 10½ பவுன் பழைய நகையை மாற்றி புதுநகை வாங்க வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து அறிவழகன் பழைய நகையை எடை போட்டு பார்த்துவிட்டு விலைபேசி உள்ளார். பின்னர் 7¾ பவுன் புதிய நகையை அறிவழகன் அந்த பெண்ணிடம் காட்டியுள்ளார். தொடர்ந்து பழைய நகை போக மீதி தொகையை அன்பழகன் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி விட்டு, பழைய நகையை வாங்கிக்கொண்டு சென்றார்.

மோசடி

பின்னர் மீண்டும் கடைக்கு வந்த அந்த பெண், பழைய நகையை கொடுத்து விட்டு, புதிய நகையை வாங்கிக்கொள்கிறேன் என்றும், கார் வாடகை கொடுக்க ரூ.2 ஆயிரம் குறைத்து கொடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

கடை உரிமையாளர் அறிவழகனும் ஏற்கனவே பரிசோதித்த நகை தான் என நினைத்து 7¾ பவுன் புதிய நகையை கொடுத்துள்ளார். அதை வாங்கிக்கொண்ட அந்த பெண் உடனடியாக காரில் ஏறி சென்றுவிட்டார். அந்த பெண் சென்ற சிறிது நேரம் கழித்து நகையை சோதித்து பார்த்தபோது அது போலி நகை என்பது தெரிய வந்தது. இதன் மூலம் ரூ.3 லட்சத்து 52 ஆயிரம் மதிப்புள்ள நகை மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.

3 பேர் கைது

இது குறித்த புகாரின் பேரில் ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இந்திரா, சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வம், பழனிசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்தும் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பர்தா அணிந்து சென்று போலி நகையை கொடுத்து தங்க நகையை வாங்கி சென்ற வேலூர் காட்பாடியை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மனைவி ராதா (வயது 37) என்பதும், அவருக்கு உடந்தையாக காரில் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மனைவி சாந்தி (39), அவரது சகோதரர் கார் டிரைவரான சங்கர் (33) என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் 7¾ பவுன் தங்க நகை மீட்கப்பட்டது.


Next Story