மினி லாரிகளில் கடத்திய 4½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்-2 பேர் கைது


மினி லாரிகளில் கடத்திய 4½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்-2 பேர் கைது
x

சேலத்தில் மினி லாரிகளில் கடத்திய 4½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

ரேஷன் அரிசி பறிமுதல்

சேலம் ரெட்டிப்பட்டி, மாமாங்கம், கருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று ரெட்டிப்பட்டி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அடுத்தடுத்து வேகமாக வந்த 2 மினி லாரிகளை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ஒரு மினி லாரியில் 2.8 டன் ரேஷன் அரிசியும், மற்றொரு மினி லாரியில் 1.8 டன் ரேஷன் அரிசியும் கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த 2 மினி லாரிகளுடன் 4.6 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

2 பேர் கைது

தொடர்ந்து மினி லாரியை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், சேலம் சோளம்பள்ளத்தை சேர்ந்த விஜய் (வயது 34), பழைய சூரமங்கலத்தை சேர்ந்த ஜாபர் (21) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பூசாரிப்பட்டி, காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதை பதுக்கி மொத்தமாக கோழி தீவன ஆலை, வெளி மாநிலங்களுக்கு கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனால் அரிசி கடத்தல் கும்பல் தலைவரான பூசாரிப்பட்டியை சேர்ந்த குமார் என்பவர் தலைமறைவாக உள்ளதால் அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story