செல்போன் பேசியபடி வந்ததால் கண்டித்தார்: போலீஸ் ஏட்டுவை தாக்கிய வாலிபர் கைது


சேலத்தில் போலீஸ் ஏட்டுவை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

போலீஸ் ஏட்டு காயம்

சேலம் தெற்கு சரக போக்குவரத்து பிரிவில் ஏட்டாக பணியாற்றி வருபவர் பாண்டியன் (வயது 42). இவர், நேற்று காலை பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள காந்திசிலை அருகில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் செல்போனில் பேசியவாறு வந்ததாக கூறப்படுகிறது.

இதனை பார்த்த போலீஸ் ஏட்டு பாண்டியன், அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிளை நிறுத்தி செல்போன் பேசியபடி ஏன் வண்டியை ஓட்டுகிறீர்கள் எனக்கூறி அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர், பாண்டியனிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவர் ஏட்டுவின் முகத்தில் குத்தினார்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இந்த தாக்குதலில் அவருக்கு மூக்கு பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மற்ற போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணைக்காக டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

மேலும், காயம் அடைந்த ஏட்டு பாண்டியன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து போலீஸ் ஏட்டுவை தாக்கிய வாலிபர் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

வாலிபர் கைது

அதில், பொன்னம்மாபேட்டை தாண்டவன் நகரை சேர்ந்த கோகுல்ராஜ் (வயது 23) என்பதும், அவர் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வத்தின் தம்பி மகன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை டவுன் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதனிடையே, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த போலீஸ் ஏட்டு பாண்டியனை போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் பார்த்து நலம் விசாரித்தனர். சேலத்தில் போக்குவரத்து போலீஸ் ஏட்டுவை வாலிபர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story