ஆத்தூரில் 5 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது-உடந்தையாக இருந்த காதலனும் சிக்கினார்


ஆத்தூரில் 5 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த காதலனும் போலீசில் சிக்கினார்.

சேலம்

ஆத்தூர்:

வியாபாரி

சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் தீபன் (வயது 32). வியாபாரி. இவருக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்து வந்துள்ளனர். நீண்டகாலமாக பெண் கிடைக்காததால் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன பெண்ணாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள தீபன் முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் சேலம் கிச்சிபாளையம் சன்னியாசி குண்டு பகுதியை சேர்ந்த அருள்ஜோதி (36) என்பவரை ஒரு மாதத்துக்கு முன்பு தீபன் திருமணம் செய்துள்ளார். நீண்டகாலமாக திருமணம் நடக்காததால், தன்னை விட வயது அதிகமாக இருந்்தாலும், அருள்ேஜாதியை திருமணம் செய்து கொள்ள அவர் சம்மதித்துள்ளார். திருமணத்தின் போது அருள்ஜோதிக்கு, தீபன் 15 பவுன் நகை போட்டுள்ளார்.

மாயம்

ஒரு மாதமாக தீபனுடன் குடும்பம் நடத்தி வந்த அருள்ஜோதி திடீரென்று மாயமாகி விட்டார். இதனால் தீபன், கிச்சிபாளையம் சன்னியாசி குண்டு பகுதிக்கு வந்து விசாரித்துள்ளார். அப்போது அவருக்கு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது. அதாவது அருள்ஜோதி, தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறியும், கணவரை விவாகரத்து செய்து விட்டதாக கூறியும் 5-க்கும் மேற்பட்டவர்களை திருமணம் செய்தது தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தீபன் ஆத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருள்ேஜாதியை கைது செய்தனர். ேமலும் அவரிடம் போலீசார் நடத்தி விசாரணையில், அருள்ஜோதி தனது பெயரை கவுசல்யா, சரண்யா என மாற்றிக்கொண்டு 5-க்கும் மேற்பட்டவர்களை திருமணம் செய்து ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

காதலன் கைது

மேலும் வாட்ஸ்-அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் தான் அழகாக இருக்கும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, திருமணத்துக்காக ஏங்கும் ஆண்களை மோசடி வலையில் வீழ்த்தி ஏமாற்றி வந்துள்ளார். திருமணம் செய்வதற்கு தன்னிடம் நகைகள் இல்லை என்று கூறி, மணமகனிடம் நகையை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாகவே அவர் இந்த மோசடியில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிந்தது.

அருள்ேஜாதிக்கு உடந்தையாக அவரது காதலனான நாமக்கல் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த ரகுவரன் (32) என்பவர் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரையும் போலீசார் கைது செய்தனர். 2 பேரிடமும் இருந்து 15 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன. தொடர்ந்து போலீசார் 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பரபரப்பு

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில், 6 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய சந்தியா என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சேலத்தில் 5 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய அருள்ஜோதியை போலீசார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story