விசைத்தறி தொழிலாளியை காரில் கடத்திய நிதி நிறுவன உரிமையாளர் கைது


விசைத்தறி தொழிலாளியை காரில் கடத்திய நிதி நிறுவன உரிமையாளர் கைது
x

விசைத்தறி தொழிலாளியை காரில் கடத்திய நிதி நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர்

குன்னத்தூர் அருகே ரூ.40 ஆயிரம் கடனுக்காக விசைத்தறி தொழிலாளியை காரில் கடத்திய நிதி நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இதில் சம்பந்தப்பட்ட மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விசைத்தறி தொழிலாளி

குன்னத்தூர் அருகே உள்ள காவுத்தம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பகவதி (வயது 45).‌ விசைத்தறி தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தைச் சேர்ந்த கருப்புசாமி (55) என்பவரிடம் கடனாக ரூ.40 ஆயிரம் பெற்றிருந்தார். இதற்காக பகவதி மாதம் தோறும் கருப்புசாமிக்கு வட்டி கொடுத்து வந்துள்ளார்.

ஆனால் கடந்த வாரம் கருப்புசாமி எனக்கு வட்டி பணம் வேண்டாம். அசல் பணம் வேண்டும் என்று பகவதியிடம் கேட்டுள்ளார். அதற்கு பகவதி உடனே கேட்டால் என்னால் எப்படி பணத்தை கொடுக்க முடியும். இந்த மாதம் கடைசியில் தருவதாக கூறினார்.

காரில் கடத்தல்

இதைத் தொடர்ந்து கடந்த வாரம் பகவதியின் வீட்டிற்கு ஒருவர் வந்தார். அவர் கருப்புசாமி உங்களை அழைத்து வரும்படி கூறியதாக தெரிவித்தார். இதனால் பகவதி அவருடன் மோட்டார்சைக்கிளில் கருப்புசாமியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

ஆனால் வழியிலேயே கருப்புசாமி மேலும் 3 பேருடன் காரில் காத்திருந்தார். உடனே கருப்புசாமி பகவதி ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளை உடன் வந்தவரிடம் கொடுத்து எடுத்துச் செல்லும்படி கூறிவிட்டு பகவதியை தனது காரில் ஏற்றிக் கொண்டு விஜயமங்கலத்தில் உள்ள வீட்டிற்கு கடத்திச்சென்றுள்ளார்.

நிதி நிறுவன உரிமையாளர் கைது

அங்கு சென்றதும் கருப்புசாமி பகவதியிடம் எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடு என்று கேட்டு மிரட்டினார். இதனால் பகவதி தனது மகளுக்கு போன் செய்து ரூ.5 ஆயிரம் கேட்டார். அதன்படி அவரும் விஜயமங்கலத்துக்கு வந்து ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார். அதன் பின்னர் பகவதியை அவர்கள் விட்டனர்.

அத்துடன் மீதி பணத்தை கொடுத்த பின் உனது மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்லுமாறு கருப்புசாமி கூறினார். இது பற்றி பகவதி குன்னத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் கருப்புசாமி, கடனுக்காக தன்னை காரில் கடத்தி சென்றார் என்று கூறியிருந்தார். அதன்பேரில் குன்னத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்புசாமியை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 ேபரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.


Related Tags :
Next Story