மூதாட்டியிடம் நகை பறித்த வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது


மூதாட்டியிடம் நகை பறித்த வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது
x

பல்லடம் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த வடமாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்


பல்லடம் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த வடமாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நகை பறிப்பு

பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி குன்னாங்கல் பாளையத்தை சேர்ந்த மாரப்பன் மனைவி சிவகாமி(வயது 65). இவர் கடந்த 20-ந் தேதி தோட்டத்தில் கறவை மாட்டில் பால் கறந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், சிவசாமியிடம் பேச்சு கொடுத்தார். அப்போது அந்த வாலிபர் திடீரென்று சிவகாமி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயற்சித்தார். இதனைத் தெரிந்து கொண்ட சிவகாமி கழுத்துடன் சேர்த்து தங்கச் சங்கிலியை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் மூதாட்டியை தாக்கி விட்டு தங்க சங்கிலியை மீண்டும் பிடித்து இழுத்த போது அது இரண்டாக அறுந்து போனது. சுமார் 1 பவுன் தங்கச் சங்கிலி மூதாட்டி கையிலும், 3 பவுன் தங்கச் சங்கிலி அந்த வாலிபரிடமும் சிக்கியது. இதையடுத்து அந்த வாலிபர் வெளியே ஓடி வந்து தயாராக மோட்டார் சைக்கிளில் காத்திருந்த அவரது நண்பருடன் தப்பினார்.

2 பேர் கைது

இந்த சம்பவத்தில் காயம் அடைந்த மூதாட்டியை அக்கம்பக்கம் உள்ளவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சின்னக்கரை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வட மாநில வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மதுசூதனன் மொகந்தி (36) மற்றும் பில்வாசிதாஸ்(35) என்பதும் சம்பவத்தன்று குன்னாங்கல் பாளையம் பகுதியில் மூதாட்டியை தாக்கி 3 பவுன் தங்கச் சங்கிலியை வழிப்பறி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.


Related Tags :
Next Story