இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது
நத்தக்காடையூர் அருகே இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த குடிநீர் வினியோக பணியாளரை போலீசார் கைது செய்தனர்.
நத்தக்காடையூர் அருகே இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த குடிநீர் வினியோக பணியாளரை போலீசார் கைது செய்தனர்.
இளம்பெண்
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 25-ந்தேதி இரவு தனது வீட்டு குளியலறையில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது குளியலறை சிமெண்டு ஜன்னலில் உள்ள துவாரம் வழியாக ஒளி பிரகாசிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். திரும்பி பார்த்தபோது வெளியே யாரோ ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருப்பது தெரிய வந்தது.
இதுபற்றி இளம்பெண் தனது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தார். உடனே அங்கிருந்தவர்கள் சென்று அங்கு இருட்டில் மறைந்து நின்று கொண்டிருந்த நபரை கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில் அவர் அதே ஊரை சேர்ந்த செல்வராஜ் (வயது 55) என்பது தெரியவந்தது. இது பற்றி அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் செல்வராஜிடம் கேட்ட போது, வீடியோ எடுத்தது பற்றி புகார் செய்தால் காட்சிகளை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
குடிநீர் வினியோக பணியாளர் கைது
இதுபற்றி இளம்பெண் குடும்பத்தினர் காங்கயம் போலீசில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்து காங்கயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி உத்தரவின்படி செல்வராஜ் தாராபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். செல்வராஜ், அப்பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்குபவராக பணிபுரிந்து வருகிறார்.