வாலிபர் கொலை வழக்கில் 4 பேர் கைது
வாலிபர் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை நகர் காமராஜர் காலனியை சேர்ந்த சித்திரைச்சாமி மகன் ஆகாஷ் (வயது 25). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக ஆகாஷ் கோவையில் தங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ஊருக்கு வந்திருந்தார்.
சம்பவத்தன்று இரவு சிவகங்கை அருகே மட்டாகுளம் கிராமத்தை சேர்ந்த தனது நண்பரான சுந்தர பாண்டி (28) என்பவரது வீட்டு மாடியில் தூங்கினார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் சுந்தரபாண்டியை விரட்டிவிட்டு ஆகாஷை முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர்.
இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன், சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி மானாமதுரையை அடுத்த அ.விளாங்குளத்தை சேர்ந்த புலிப்பாண்டி (21), முத்துப்பட்டியை சேர்ந்த கார்த்திக் ராஜா (25), மதுரையை சேர்ந்த வசந்தகுமார் (24), மட்டாகுளத்தை சேர்ந்த வினோத் குமார் (29) ஆகியோரை கைது செய்தனர்.